7 கோடி தமிழர்களை ரஜினி ஏமாற்ற மாட்டார்: நண்பர் ராஜ்பகதூர் நம்பிக்கை

நடிகர் ரஜினியின் நீண்ட கால நண்பர்களில் ராஜ்பகதூர் முக்கியமானவர்.

1970-களில் ரஜினியும், ராஜ் பகதூரும் ஒன்றாக கர்நாடக மாநில அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றினார்கள்.

மெஜஸ்டிக்கில் இருந்து ஸ்ரீநகரா செல்லும் 10ம் எண் பஸ்சில் ராஜ்பகதூர் டிரைவராகவும், ரஜினி கண்டக்டராகவும் இணைந்து பணியாற்றினார்கள்.

ரஜினி கண்டக்டர் வேலையை ராஜினாமா செய்து விட்டு, நடிகராகவதற்காக அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்த போது, நண்பர் ராஜ்பகதூர் மிகவும் உதவியாக இருந்தார். அதை மறக்காத ரஜினி, அதற்கு நன்றிக் கடனாக ராஜ்பகதூரை வள்ளி படத்தில் நடிக்க வைத்து பெரும் அளவில் பண உதவி செய்தார்.

ரஜினி, ராஜ்பகதூர் இடையிலான நட்பு சுமார் 40 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் முன்பு போல நீடிக்கிறது. ரஜினி எப்போதெல்லாம் பெங்களூருக்கு செல்கிறாரோ, அப்போதெல்லாம் அவர் தனது நண்பர்களை சந்தித்து பேச தவறுவதில்லை.

இந்த மாத தொடக்கத்திலும் ரஜினி பெங்களூர் சென்றிருந்தார். அப்போது அவர் தனது நெருங்கிய நண்பர்களுடன் அரசியல் பிரவேசம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கூறியதாவது:-

நடிகர் ரஜினி ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 8-ந்தேதி பெங்களூர் வந்தார். அப்போது நான் அவரை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் மிகுந்த டென்‌ஷனுடன் காணப்பட்டார்.

அவ்வளவு டென்‌ஷனாக நான் இதுவரை ரஜினியைப் பார்த்ததே இல்லை. அரசியலில் ஈடுபடுவதா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பமான மன நிலையில் அவர் இருக்கிறார். இரு தலைக்கொள்ளி எறும்பாக அவர் தவித்துக் கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழக மக்களை நல்வழியில் நடத்துவது யார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை நினைத்து அவர் தனது வேதனையையும் கவலையையும் வெளியிட்டார்.

அவரை தற்போதைய சூழ்நிலையில் உடனே அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் மிகவும் விரும்பி அழைப்பு விடுத்தபடி உள்ளனர். பொதுவாக தமிழக மக்களும் அவரை அரசியலுக்கு வருமாறு அழைக்கிறார்கள்.

நடிகர் ரஜினி புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது. நானும் அதையே விரும்புகிறேன்.

தற்போது ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்து வருகிறார். கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று அவர் சூசகமாக கூறியுள்ளார்.

அவரது ஆன்மீகக் குரு மகா அவதார் பாபாஜி நிச்சயம் நல்ல வழியை காட்டுவார். அப்போது ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார்.

அவர் சூசகமாக வெளியிட்டுள்ள கருத்தை வைத்துப் பார்க்கும்போது, 7 கோடி தமிழ் மக்களை அவர் ஏமாற்ற மாட்டார் என்றே நினைக்கிறேன்.

இவ்வாறு ரஜினி நண்பர் ராஜ்பகதூர் கூறினார்.