மத்திய மந்திரி வெங்கை யாநாயுடு சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதுவரை எந்த ஒரு மத்திய மந்திரியும் தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்தது இல்லை. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த (புரட்சி தலைவி அம்மா) மூத்த தலைவர் எஸ்.செம்மலை ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி இருக்கிறார். இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இது மாதிரியான சம்பவம் நிகழ்ந்தது இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசு பலவீனமாக இருப்பதால் அதை பாரதீய ஜனதா பரிசோதித்து பார்க்கிறது.
மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் வெங்கையாநாயுடு சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். தனிப்பட்ட முறையில் என்னை பொறுத்தவரை இது அச்சுறுத்தும் குரலாகவே கருதுகிறேன். ஏனெனில் இந்த அரசு பல வீனமாகவே இருக்கிறது. அதற்காக தமிழக அரசியல் விவகாரத்தில் பாரதீய ஜனதா தலையீடுவதாக நான் சொல்லவில்லை.

வருமான வரி சோதனைக்கு உள்ளான அமைச்சர், மற்றும் வழக்குபதிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் மீது முதல்-மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது ஜெயலலிதாவின் அரசாக இருந்தால் அவர்களை தூக்கி எறிந்து இருக்க வேண்டும்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு சிறையில் இருக்கும் சசிகலாதான் காரணம். ஏனெனில் பெரும்பாலான மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர் பாதுகாப்பாக இருக்கிறார்.
தற்போதைய அரசு பணத்தின் மூலமே எதையும் சாதிக்கலாம் என்று கருதுகிறது. இதனால் இந்த அரசு பலவீனப்பட்டு காணப்படுகிறது.
நீட், போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் ஆகிய பிரச்சினைகளில் இந்த அரசு திறமையான முறையில் கையாளவில்லை. சரியான தலைமை நிர்வாகம் இல்லை. அரசும், கட்சியும் தலை இல்லாத கோழி போல் இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சி தொண்டர்கள், மக்கள் ஆதரவு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த ஆதரவு எப்போதும் இருக்கும். தற்போது பொதுத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். 1977-ல் எம்.ஜி.ஆரை போல வெற்றி பெறுவாம்.
இணைப்பு பேச்சு வார்த்தை குறித்து ஓ.பி.எஸ். தான் முடிவு செய்வார். அவர் என்ன முடிவு எடுத்தாலும் தொண்டர்கள் அவர் பின்னால் நிற்பார்கள்.
இவ்வாறு செம்மலை கூறியுள்ளார்.







