ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை

போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 2009-ம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு டிரான்ஸ்ஃபர் ஆனார்.

ரியல் மாட்ரிட் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராக விளங்கி வருகிறார்.

லா லிகாவில் நேற்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது. இதில் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்தார். ரொனால்டோ முதல் கோலை அடிக்கும்போது ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இதில் லா லிகா தொடரில் 282 கோல்களும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 88 கோல்களும், கோபா டெல் ரெய் தொடரில் 22 கோல்களும், கிளப் உலகக் கோப்பை ஆட்டத்தில் நான்கு கோல்களும், ஸ்பெயின் சூப்பர் குாப்பையில் மூன்று கோல்களும், யூ,இ.எஃப்.ஏ. சூப்பர் கோப்பையில் இரண்டு கோல்களும் அடித்துள்ளார்.