8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன. நேற்று ஓய்வு நாளாகும்.
லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளியும், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 17 புள்ளியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளியும் பெற்று முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளியும், குஜராத் லயன்ஸ் அணி 4 வெற்றி, 10 தோல்வியுடன் 8 புள்ளியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 வெற்றி, 10 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 7 புள்ளியும் பெற்று முறையே 5 முதல் 8 இடங்களை தனதாக்கி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஐதராபாத்தில் 21-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி காணும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டு. அதாவது இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி, நாளை நடைபெறும் ஐதராபாத்-கொல்கத்தா அணிகள் இடையிலான வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 19-ந் தேதி (பெங்களூருவில்) மோதும்.
2013, 2015-ம் ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது. மும்பை அணியில் பேட்டிங்கில் சிமோன்ஸ், பொல்லார்ட், பார்த்தீவ் பட்டேல், நிதிஷ் ராணா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். நிதிஷ் ராணாவுக்கு பதிலாக அம்பத்தி ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
பந்து வீச்சில் மலிங்கா, மெக்லெனஹான், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்பஜன்சிங், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். வான்கடேயில் நடந்த மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 230 ரன்கள் குவித்தது. அந்த ஆட்டத்தில் மும்பை அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது. எனவே மும்பை அணி தனது பந்து வீச்சில் கவன செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.
புனே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெருக்கடிக்கு மத்தியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை பந்தாடியதுடன், புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. புனே அணியில் பேட்டிங்கில் திரிபாதி, ரஹானே, ஸ்டீவன் சுமித், மனோஜ்திவாரி, டோனி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். இங்கிலாந்து அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பி விட்டது புனே அணிக்கு பின்னடைவாகும். பந்து வீச்சில் உனட்கட் (21 விக்கெட்டுகள்), ஷர்துல் தாகூர் (8 விக்கெட்டுகள்), கிறிஸ்டியன் (9 விக்கெட்டுகள்) ஆகியோர் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.
வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. இரு அணிகளிலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் அதிகம் இருப்பதால் இந்த ஆட்டத்தில் ரன் குவிப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி ஒரு முறையும், புனே அணி 3 தடவையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் இரண்டு லீக் ஆட்டத்திலும் புனே அணி, மும்பையை வீழ்த்தி இருக்கிறது.