நாங்களும் மனிதர்கள்தான், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முடியாது: பொல்லார்டு சொல்கிறார்

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 230 ரன்கள் குவித்தது. பின்னர் 231 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் பொல்லார்டு – ஹிர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் நிலைக்கு சென்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பொல்லார்டு இரண்டு ரன்களுக்கு ஓடினார். ஆனால் கிரீஸை பேட்டால் தொடாததால் 1 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் கடைசி 4 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் நான்கு பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இன்னும் தக்கவைத்துள்ளது.

நான்கு பந்தில் 9 ரன்கள் எடுக்க முடியாததால் பொல்லார்டு மீது விமர்சனம் எழுந்தது. ஆனால், நாங்களும் மனிதர்கள்தான், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முடியாது என்று பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

24 பந்தில் 1 பவுண்டரி, 5 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த பொல்லார்டு இதுகுறித்து கூறுகையில், ‘‘நாங்களும் மனிதர்கள்தான். ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது என்பதையே இந்த போட்டி உணர்த்துகிறது. நாம் ஒவ்வொரு ஆட்டத்திலும் மேம்பட்டிருக்கிறோம். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோசமாக ஆடினோம். ஆனால் நேற்று முடிந்துபோன நிலையிலிருந்து போராடினோம். எதிரணியினரும் அவர்கள் அளவில் தொழில்ரீதியான கிரிக்கெட் வீரர்களே. ஆகவே எப்போதும் ஆட்டத்தை நம்பக்கம் திருப்பி வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க முடியாது.

நாம் பதற்றமடைய வேண்டிய தேவையே இல்லை. நாம் தலையை நிமிர்த்திக் கொள்ளலாம். முதலில் எந்த ஒரு தொடரிலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டும். நாம் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டோம்.

நாங்களும் தவறுகள் செய்யக் கூடியவர்களே என்பதைத்தான் பஞ்சாப் அணிக்கெதிரான தோல்வி காட்டுகிறது. உத்வேகம் அடைந்து அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அப்புறம் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய பீலிங் எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்பீர்கள்’’ என்றார்.