இலங்கை வழியாக ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு வலிநிவாரண மாத்திரைகள்?

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை ஊடாக வலிநிவாரண மாத்திரைகளை அனுப்பும் மோசடி வர்த்தகம் ஒன்றை இத்தாலியப் பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக பல்வேறு சர்வதேச ஊடகங்களும் இன்று (11) முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களின் பிரகாரம் இந்த மோசடி வர்த்தகத்தின் பின்னணியில் இந்தியாவின் மருந்து உற்பத்தி கம்பனியொன்று செயற்படுவதாக தெரிய வந்துள்ளது.

குறித்த இந்திய நிறுவனம் ட்ரமெடோல் எனும் வலி நிவாரணி மாத்திரையை லிபியாவில் செயற்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை ஊடாக அனுப்பி வந்துள்ளது.

இந்த நிலையில் வழமை போன்று இம் முறையும் இத்தாலி துறைமுகம் வழியாக லிபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகளை இத்தாலியப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதன் பெறுமதி 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எனினும் இதனை துபாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இவற்றை 2 இலட்சத்து ஐம்பதினாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கி லிபியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் குறித்த வர்த்தகர் தொடர்பான அனைத்து விபரங்களும் கொழும்பில் வைத்து சரக்கு கப்பலில் ஏற்றப்படும் முன்பாக காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பில் இருந்து கப்பலில் ஏற்றப்படும் போது குறித்த வலி நிவாரணி மாத்திரைகளை குளிர் கம்பளி விரிப்பு மற்றும் ஷாம்பூ வகைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இத்தாலி பொலிசார் கூறியுள்ளனர்.