பாபாவை 40 ஆண்டுகள் பூஜித்த மகல்சாபதி

சீரடி சாய்பாபாவிடம் எத்தனையோ பக்தர்கள் நெருங்கிப் பழகினார்கள். ஆனால் பாபாவிடம் பிரதிபலன் எதையுமே எதிர் பார்க்காத ஒரே பக்தர் மகல்சாபதி. சாய்பாபா – மகல்சாபதி இருவரது வாழ்க்கையும் இரண்டற கலந்தது. பின்னிப் பிணைந்தது.

இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் சீரடி சாய்பாபாவின் சிறப்பை உணர்ந்து அவரை பூஜித்து வழிபடுகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் மகல்சாபதி. சீரடிக்கு வந்த இளம் பாபா பெயரை “சாய்பாபா” என்று மாற்றிய பெருமையும் மகல்சாபதிக்கே உண்டு. சாய்பாபா என்ற மந்திர சொல் கேட்டு பக்தர்கள் மயங்கிக் கிடப்பதற்கு வித்திட்டது இவர்தான்.

சீரடியில் சாய்பாபாவை 40 ஆண்டுகள் பூஜித்து, ஆராதித்து, வழிபட்ட சிறப்பும் இவருக்கு உண்டு. சாய்பாபாவுக்கு அவர் பக்தனாக மட்டுமல்ல, வேலைக்காரனாகவும் திகழ்ந்தார். இத்தனைக்கும் மகல்சாபதி பரம ஏழை. ஆனால் நல்ல மனிதர். மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டார்.

சீரடியில் உள்ள கண்டோபா கோவில், அவரது குல தெய்வ கோவிலாகும். மூலவர் சிவனின் பெயர் மகல்சாபதி. அந்த பெயரையே அவருக்கு சூட்டியிருந்தனர். அந்த ஆலயத்தின் பூசாரியாக அவர் இருந்தார். பொற்கொல்லர் இனத்தைச் சேர்ந்த மகல்சாபதிக்கு குடும்பத் தொழில் கை கொடுக்கவில்லை. 7 ஏக்கர் நிலம் இருந்தும் விளைச்சல் இல்லாததால் அதிலிருந்து அவருக்கு வருமானம் இல்லை.

வறுமையில் வாடிய அவர் கண்டோபா ஆலய வருவாயை மட்டுமே நம்பி இருந்தார். அந்த வருவாயும் ஆலய நிர்வாக செலவுகளுக்கு சென்றதால், மகல்சாபதியின் வாழ்க்கை வறுமையில்தான் தள்ளாடியது. மனைவி, 3 மகள்கள், 1 மகனை காப்பாற்ற அவர் கடும் போராட்டங்களை சந்தித்தார். இந்த நிலையில்தான் அவர் 1854-ம் ஆண்டு முதன் முதலில் இளம் பாபாவை பார்த்தார்.

வேப்ப மரத்தடியில் அமர்ந்த இளம் பாபாவின் செயல்பாடுகள் மகல்சாபதியை கவர்ந்தன. ஆனால் திடீரென பாபா மாயமாகி விட்டார். 1858-ம் ஆண்டு பாபா மீண்டும் சீரடிக்கு திரும்பிய போது முதன் முதலில் மகல்சாபதிதான் பார்த்தார். மகிழ்ச்சி பொங்க அவர், “ஆவோ சாய்” என்று அழைத்தார். அன்று அவர் அப்படி அழைத்த பெயரே பாபாவுடன் இணைந்து ‘சாய்பாபா’ என மாறி நின்று நிலைத்து விட்டது.


மகல்சாபதி

மகல்சாபதி ஒருநாள் கண்டோபா கோவிலில் பூஜை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சாய்பாபா வந்தார். இந்த இடம் மிகவும் அமைதியாக உள்ளது. இங்கு நான் தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டார். அதைக் கேட்டதும் மகல்சாபதி கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். நீங்கள் ஒரு இஸ்லாமியர். இந்த கோவிலில் உங்கள் காலடி படக்கூடாது. எனவே உள்ளே வராதீர்கள் என்றார்.

அதன் பிறகே சாய்பாபா ஊரின் நடுவில் உள்ள வேப்ப மரத்தடியில் போய் அமர்ந்தார். நாளடைவில் துவாரகமாயி மசூதியில் குடியேறி அடுத்தடுத்து அற்புதங்கள் செய்யப்பட்ட பிறகே சாய்பாபா சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு அவதாரம் என்பதை மகல்சாபதி உணர்ந்தார். அதற்கு பிறகு மகல்சாபதியால் இருப்புக் கொள்ள இயலவில்லை. துவாரகமாயிக்கு வந்து சாய்பாபாவை வணங்கினார்.

நாளடைவில் சாய்பாபாவின் சீடர்களில் நம்பர்-ஒன் சீடராக மகல்சாபதி மாறினார். கண்டோபா ஆலயத்தில் கடவுளுக்கு எத்தகைய ஆரத்தி, பூஜைகள் செய்தாரோ, அதையெல்லாம் அவர் சாய்பாபாவுக்கு செய்தார். சாய்பாபாவுடன் முதன் முதலில் ஆத்மார்த்தமாக ஒன்றியது இவர்தான். ஒரே துண்டில் பாபாவும், மகல்சாபதியும் படுத்துத்தூங்கும் அளவுக்கு அவர்களிடையே நட்பு ஏற்பட்டது.

மகல்சாபதியின் தூய பக்திமிகு சேவையைத் தொடர்ந்து தான் சீரடியில் ஒருவர் பின் ஒருவராக பாபாவிடம் பக்தர்களாக மாறினார்கள். பாபாவை தங்கள் ஊருக்கு வந்த கண்கண்ட தெய்வமாகப் போற்றினார்கள்.

இதையடுத்து துவாரகமாயி மசூதியில் சாய்பாபாவுக்கு தினசரி ஆராதனைகளை மகல்சாபதி தொடங்கினார். பாபாவின் பாதங்களிலும், கழுத்திலும் அவர் சந்தனம் பூசி, மாலை அணிவித்து, நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி வழிபட்டார். இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் மகல்சாபதியின் மன உறுதி காரணமாக பாபாவுக்கு தினசரி ஆராதனைகள் வழிபாடுகள் தொடர்ந்தன.

ஒரு கட்டத்தில் மகல்சாபதி குடும்பத்தில் கடும் வறுமை ஏற்பட்டது. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை. அவரது ஒரே மகனும் திடீரென எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தான். என்றாலும் மகல்சாபதி தினமும் கண்டோபா ஆலயத்துக்கு சென்று பூஜை வைக்க தவறியதே இல்லை.


பாபாவை ‘சாய்’ என்று மகல்சாபதி அழைத்த காட்சி.

அங்கு பூஜை முடிந்ததும் நேராக துவாரகமாயிக்கு வந்து பாபாவுக்கு ஆராதனை செய்வார். இரவு ஆராதனை செய்து முடித்ததும் அங்கேயே தூங்கி விடுவார். பாபாவின் நண்பன் போல பழகிய ஒரே நபர் மகல்சாபதிதான். அந்த உரிமையில் சில சமயம் பாபாவிடம் அவர் அடி கூட வாங்கி இருக்கிறார்.

1896-ம் ஆண்டு ஒருநாள் மகல்சாபதியை அழைத்த பாபா, இனி இரவு இங்கு தங்காதீர்கள். உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவனுக்கு 25 ஆண்டுகள் நீங்கள் காவலனாக இருப்பீர்கள் என்றார். சாய்பாபா சொன்னது போலவே மகல்சாபதிக்கு 1897-ம் ஆண்டு ஜன்மாஷ்டமி தினத்தன்று ஆண் குழந்தை பிறந்தது. இதை பாபா நடத்திய மகிமை என்றே எல்லோரும் கூறினார்கள். இதனால் பாபாவிடம் மீண்டும் மகல்சாபதி வந்து விட்டார். இருவரும் முன்பு போல ஒரே துணியில் படுத்து தூங்கினார்கள்.

இப்படி தன் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட பாபாவுக்காக, அவர் இறந்த போது மகல்சாபதி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதன் பிறகு பாபாவின் மகிமையை உலக மக்கள் தெரிந்து கொள்ள சேவையாற்றினார். அவரது மரணம் கூட பாபா நிச்சயித்தபடித்தான் இருந்தது.

25 ஆண்டுகள் உன் மகனை காப்பாய் என்று பாபா கூறி இருந்தார். அதன்படி மகல்சாபதியின் மகனுக்கு 25 வயது ஆனபோது அதாவது 1922-ல் மகல்சாபதி மரணம் அடைந்தார். சாய்பாபா ஒரு ஏகாதசி தினத்தன்றுதான் தன் உயிரை தன் உடம்பை விட்டு நீக்கி இருந்தார். அதுபோல பாபாவின் நிழலாக வாழ்ந்த மகல்சாபதியும் ஒரு ஏகாதசி தினத்தன்றுதான் தன் உயிரை விட்டார்.

அவர்களது நட்பு எந்த அளவுக்கு ஆத்மார்த்தமானதாக இருந்தது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை. சாய்பாபாவுடன், மகல்சாபதி வாழ்ந்த ஒவ்வொரு நாளும், புனிதமான நாட்களாகும். பாபா தினமும் இரவு விழித்திருந்து நாமஸ்மரணை செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது மகல்சாபதிதான்.

ஒருநாள் மகல்சாபதி வீட்டுக்கு புறப்பட்டபோது பாபா அவரிடம், “பார்த்து போ, வழியில் இரண்டு திருடர்கள் இருக்கிறார்கள்” என்றார். மகல்சாபதி குழப்பத்துடனே சென்றார். வீட்டை நெருங்கியபோது வழியில் 2 பெரிய நல்ல பாம்புகள் இருப்பதைப் பார்த்த பிறகே அவருக்கு பாபாவின் எச்சரிக்கை புரிந்தது.


சாய்பாபாவுடன் மகல்சாபதி.

1886-ம் ஆண்டில் ஒரு நாள் மகல்சாபதியை அழைத்த பாபா, “நான் 3 நாட்கள் இந்த உடலை விட்டு விண்ணுக்கு செல்லப் போகிறேன். நான் திரும்பி வரும் வரை என் உடலை நீதான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். அதன்படி பாபா தன் உடலை விட்டு அகன்றார். பாபா இறந்து விட்டதாக கருதிய அதிகாரிகள் அவர் உடலை கைப்பற்றி அடக்கம் செய்ய முயன்றனர். அதைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் சாய்பாபா புகழ் தரணியெல்லாம் தழைக்க மகல்சாபதி வழி வகுத்தார்.

மகல்சாபதி நினைத்திருந்தால், பாபாவுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி கோடி, கோடியாக சம்பாதித்து இருக்கலாம். ஆனால் அவரிடம் எந்த ஆசையும் இருந்ததே இல்லை. பாபா காசு கொடுத்தால் கூட அவர் பெற்றுக் கொள்ளவில்லை.

ஒரு தடவை பக்தர் ஒருவர் தட்டு நிறைய நாணயங்களை வைத்து பாபாவிடம் கொடுத்தார். பாபா அதை ஆசீர்வதித்து திருப்பி கொடுத்தார். உடனே அந்த நபர் அந்த நாணயங்கள் அனைத்தையும் மகல்சாபதியிடம் கொடுத்தார். ஆனால் மகல்சாபதி அதை வாங்கவில்லை. கடைசி வரை அவர் அத்தகைய சொக்கத் தங்கமாகவே திகழ்ந்தார்.

1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாய்பாபா மரணம் அடைந்த போது அவரை அடக்கம் செய்வது தொடர்பாக இந்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் சர்ச்சை ஏற்பட்டது. அதை மகல்சாபதியால் தான் சமரசமாக பேசி நிவர்த்தி செய்ய முடிந்தது. அதனால் தான் உலகம் இன்றும் அவரை, சாய்பாபாவிடம் தம்மை முழு நம்பிக்கையுடன் அர்ப்பணித்து ஒப்படைத்துக் கொண்டு பொறுமையை கடைபிடித்து வாழ்ந்த மகான்” என்று புகழ்கிறது.

பாபாவே கதி என்று வாழ்ந்த அவர், பாபா நாமத்தை உச்சரித்தப்படி உலக வாழ்க்கையை முடித்தது குறிப்பிடத்தக்கது. அவர் வாழ்ந்த வீடு இன்றும் சீரடியில் நினைவு இல்லமாக பேணி, போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மகல்சாபதியின் மகன் மார்த்தாண்ட்டின் வாரிசுகள் அந்த வீட்டில் உள்ளனர். சீரடி செல்லும் பக்தர்களில் பலரும் மகல்சாபதி வீட்டுக்கு சென்று மனப்பூர்வமான அஞ்சலியையும், ஆராதனையையும் செலுத்துகிறார்கள்.

அந்த வீட்டில் சாய்பாபா பயன்படுத்திய சில பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. சீரடி வரும் பக்தர்கள் அவற்றையும் வழிபட்டு செல்கிறார்கள். இதன் மூலம் சாய்பாபாவின் புனித அவதார வரலாற்றில் மகல்சாபதி பெயரும் நிரந்தரமாக இடம் பிடித்துள்ளது. மகல்சாபதி போன்று பாபா மனதில் இடம் பிடித்திருந்த தாஸ்கணு மகராஜ், காக்கா சாகேப் தீட்சித் பற்றி அடுத்த வாரம் (வியாழக்கிழமை) காணலாம்.