சம காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வெசாக் தினத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை வரவுள்ளார். இந்நிலையில், நாளை மறு தினம் பிரதமர் மோடியை இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது சம காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளேன்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணி விடுவிப்பை வலியுறுத்திய போராட்டம் என தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை இந்திய பிரதமர் மோடியிடம் முன்வைக்கவுள்ளேன். மேலும் நியாயமான நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்தவுள்ளேன்.
இந்தியாவிற்கு இலங்கை பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதிகாரம் பகிரப்படுவதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கவுள்ளேன்.
எவ்வாறாயினும், இந்திய பிரதமருடனான இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







