வடக்கு, கிழக்குக்கு 59 ஆயிரம் வீடுகளை நிர்மானிக்கும் திட்டம்: பரிந்துரைகளை முன்வைக்க குழு

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக வீடுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள முன்நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும்

வேலைத்திட்டத்தினை மீண்டும் மதிப்பீடு செய்வதற்காக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.

அதன் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வீட்டுக்கு 1.5மில்லியன் ரூபா வீதத்தில் 6ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 6 ஆயிரம் முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும்இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக சீமெந்து கற்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றை பாவித்து நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகளை நிர்மானிக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்தும் முறை தொடர்பில் சிபார்சுகளை முன்வைப்பதற்கு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.