வடக்கில் மணல் மற்றும் கிறவல் பெறுவதில் பாரிய நெருக்கடி!!

வடமாகாணத்தில் கட்டிட நிர்மாணப் பணிகள் மற்றும் வீதி புனரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மற்றும் கிறவலை பெறுவதில் பாரிய நெருக்கடி நிலவுவதால் மக்களுடைய வீட்டுதிட்ட பணிகளும், மாகாணசபையின் மூலதன வேலைத்திட்டங்களும் கிடப்பில் போடப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக வடமாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 92வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்றைய அமர்வில் மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, மாகாணத்தில் உள்ள கனிம வளங்களான மணல் மற்றும் கிறவல் ஆகியவற்றை மாகாணத்தில் உள்ளவர்கள் இலகுவாக பெறுவதற்கான வழிவகை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பிரேரணை ஒன்றை முன்மொழிந்திருந்தார்.

இந்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் உள்ளிட்ட உறுப்பினர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கனிம வளங்களை பாதுகாப்பதில் காட்டும் இறுக்கமான அக்கறையினால் கனிம வளங்கள் திணைக்களம் எமக்கு தேவையான மணல் மற்றும் கிறவலை பெறுவதற்கு மிகுந்த நெருக்கடியை கொடுக்கிறது.

அதேபோல் கனிம வளங்கள் திணைக்களம் அனுமதி கொடுத்தாலும் வனவள திணைக்களம் அனுமதியை மறுக்கும் நிலையே காணப்படுகின்றது.

இதனால் மக்களுடைய வீட்டு திட்டப்பணிகள் மற்றும் மாகாண சபையின் மூலதன வேலைத்திட்டங்கள் கிடப்பில் போடப்படும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டினர்.

இதேவேளை மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா குறிப்பிடுகையில்,

பூநகரி கௌதாரி முனை பகுதியில் பாரிய மணல் மலைகள் காணப்பட்டன. ஆனால் அவை பின்னர் காணாமல்போயிருக்கின்றன.

அதற்கு காரணமானவர்கள் தொடர்பாக நாங்கள் யாரிடம் முறையிடுவது. அப்படி பல இடங்களில் எங்களுடைய வளங்கள் சுறண்டப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் 2017ம் ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் நிறைவடையும் நிலையில் மணல் மற்றும் கிறவல் இல்லாமையினால் பல கட்டிட வேலைகள் கிடப்பில் போடப்படும் நிலையில் உள்ளன.

எனவே இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் அல்லது பொறுப்புவாய்ந்த அமைச்சர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டார்.