பலர் முன்னிலையில் அழுதபடி உள்ளாடையை கழற்றி கொடுத்தேன்: கேரள மாணவி

மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு நாடு முழுவதும் கடந்த 7-ந்தேதி நடந்தது.

இதில், 11 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் பங்கேற்றவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்வில் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காக மாணவ-மாணவிகள் முழுமையாக சோதனை செய்த பின்பே அனுப்பப்பட்டனர்.

இதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள மையத்திற்கு தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் அவரது உள்ளாடையை அகற்ற வேண்டுமென தேர்வு கண்காணிப்பாளர் கூறினார். இதனால் அந்த மாணவி, உள்ளாடையை அகற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுதச் சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி பாதிக்கப்பட்ட அந்த மாணவி நிருபர்களிடம் கூறியதாவது:-

கண்ணூர் மாவட்டம் பரியாரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு நீட் தேர்வு எழுதச் சென்றேன். தேர்வில் வெற்றி பெறும் அளவிற்கு என்னை தயார்படுத்தி இருந்தேன். தேர்வில் பங்கேற்க நானும் என் தாயார் மற்றும் சகோதரனும் பரியாரம் பள்ளிக்கு சென்றோம். அங்கு நான் மட்டும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டேன். தாயாரும், சகோதரனும் வெளியே அமர்ந்திருந்தனர்.

நான், உள்ளே சென்றதும் தேர்வு அறைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அரங்கில் என்னை சோதனை செய்தனர். அங்கு 4 பெண்கள் இருந்தனர்.

அவர்கள் நான் அணிந்திருந்த உடையுடன் தேர்வு அறைக்கு செல்லக் கூடாது என கூறி விட்டனர்.

எனவே என் சகோதரன் வெளியில் சென்று அருகில் உள்ள ரெடிமேடு கடையில் இருந்து புதிய உடை வாங்கி வந்தான். அதனை அணிந்துக் கொண்டு மீண்டும் பரிசோதனை கூடத்திற்கு சென்றேன். அங்கு என்னை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்தனர். அப்போது என் உள்ளாடையில் இருந்து பீப் சத்தம் கேட்டது.

கண்காணிப்பாளர் அங்கு என்ன மறைத்து வைத்திருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு நான், உள்ளாடையில் உள்ள மெட்டல் பட்டன் என்று கூறினேன். அதற்கு, மெட்டல் பட்டன் அணிந்து உள்ளே செல்லக்கூடாது என்று கூறி உள்ளாடையை அகற்றும்படி கண்காணிப்பாளர் கூறினார்.

அதற்கு நான், அருகில் உள்ள கழிவறைக்கு சென்று உள்ளாடையை கழற்றி வருகிறேன், என்றேன். அதற்கு கண்காணிப்பாளர் அனுமதிக்கவில்லை. இங்கேயே கழற்ற வேண்டும் என்று கூறி விட்டார். இதனால் நான் சக மாணவிகள் முன்பு உள்ளாடையை கழற்றினேன்.

பின்னர் அதனை தாயாரிடம் கொடுத்து விட்டு தேர்வுக்கு சென்றேன். ஆனால் சோதனை என்ற பெயரில் எனக்கு நடந்த வேதனையால் மன உளைச்சல் ஏற்பட்டது. நன்றாக படித்திருந்தும் தேர்வை சரியாக எழுத முடியவில்லை. இதுபோன்ற நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இதை உங்களிடம் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள மாணவிக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். கேரள மாநில மனித உரிமை கமி‌ஷன் இது தொடர்பாக நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ.யிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுபோல கண்ணூர் மாவட்ட போலீஸ் அதிகாரி தேர்வு நடத்திய அதிகாரிகள் 3 வாரத்தில் இச்சம்பவம் குறித்து பதில் அளிக்க வேண்டுமென்றும் கூறி உள்ளது.

மேலும் தேசிய மனித உரிமை கமி‌ஷன் இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மாநில மனித உரிமை கமி‌ஷன் கூறி உள்ளது.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தேர்வு எழுதச்சென்ற மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்குமென்றும் கருத்து தெரிவித்துள்ளார்.