இங்கிலாந்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, அஸ்வின், மொகமது ஷமி, மணிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருக்கும் டோனியின் பேட்டிங் சமீப காலமாக திருப்தியளிக்கும் வகையில் இல்லை. அதேவேளையில் இளம்வீரரான ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டோனியின் அடுத்த விக்கெட் கீப்பர் வாரிசு என்று எதிர்பார்க்கப்படும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்ற ஒரு பேச்சும் இருந்தது.
ஆனால் ஒட்டுமொத்த தேர்வாளர்களும் டோனியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியதால் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டோனி மீது அவர்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். இன்னும் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் டோனிதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்
இதுகுறித்து இந்திய தேர்வுக்குழுவின் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில் ‘‘டோனிதான் இன்னும் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்று நம்மில் எத்தனை பேர் நம்புகிறோம்? நாங்கள் (தேர்வாளர்கள்) அனைவரும் அவர்தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று நம்புகிறோம். அவருடைய பேட்டிங் பார்ஃம் குறித்து மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்திய அணியின் விலைமதிப்பற்ற சொத்து டோனி. அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது அவர் கூறும் யோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவர் சிறந்த மூளையை பெற்றுள்ளார். விராட் கோலியை வழிநடத்த சிறந்த நபர்.
கடந்த 10 ஆண்டுகளாக டோனி விக்கெட் கீப்பர் பணியில் மோசமாக செயல்பட்டதே கிடையாது. அவரை எப்போதும் நாம் பேட்ஸ்மேனாகவே நடத்துகிறோம், ஆனால் விக்கெட் கீப்பராகவும் அவர் சிறப்பாக வேலை செய்கிறார். இதை பலர் பாராட்டவில்லை. என்னைப் பொறுத்த வரையில் அவர்தான் இன்னும் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்.
ரிஷப் பந்தின் ஆட்டத்தில் நாங்கள் அனைவரும் முழுவதுமாக ஈர்க்கப்பட்டுள்ளோம். அவர் ஒரு கிரிக்கெட்டர். வருங்காலத்திற்கான இந்திய அணிக்கு அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். வருங்காலத்தின் இந்திய அணிக்கு சரியான நபராக இருப்பார்’’ என்றார்.