அரசியலமைப்பு பேரவையின் விவாதம் எதிர்வரும் ஜுன் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நிறுவப்பட்டுள்ள அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கைக்கான ஒரு பகுதி வரைவு அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், வழிநடத்தும் குழுவின் முழுமையான அறிக்கை அடுத்த மாதம் அரசியலமைப்பு பேரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என அதன் உறுப்பினர் ஒருவர் கூறியதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவின் உள்ளடக்கங்களை ஆராய்ந்து அவை பற்றிய தங்களது அபிப்பிராயங்களை எதிர்வரும் 23ஆம் திகதி சமர்ப்பிப்பதாக குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயங்களை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரையான காலப்பகுதியில் ஆராயும் குழு, அறிக்கையை இறுதிப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதன் பின்னர், அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







