முஸ்லிம்களின் தாடிக்கும், தொப்பிக்கும் வரி!

இந்த நல்லாட்சி என்று சொல்லுகின்ற அரசு, எதிர் காலத்தில் முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நன்றி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்து கொண்டு இன்றைய தினம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த அரசாங்கம் இன்று மக்களை ஏமாற்றி வருகிறது. நோன்பு மாதம் வருவதை அறிந்து இவ்வரசு பேரீச்சம் பழத்தின் மீதான வரியை அதிகரித்துள்ளது. இதனை இவ்வாட்சியாளர்களுக்குத் தெரியாமல் யாராலும் செய்ய முடியாது. இவ்விடயமானது இந்த அரசு முஸ்லிம்களைப் புறந்தள்ளி பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.

முஸ்லிம்கள் நோன்பு காலங்களில் பேரீச்சம் பழத்தை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு இவ்வரசு உதவி செய்யும் பொருட்டு அதன் விலையைக் குறைத்து வழங்க வேண்டும். நாம் எமது காலத்தில் அவ்வாறுதான் செய்தோம்.

அனைத்து முஸ்லிம்களும் அவர்களுக்கு தேவையானளவு பேரீச்சம் பழத்தை கொள்வனவு செய்வதை இவ்வரசு உறுதி செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் இலங்கை அரசு பேரீச்சம் பழத்தின் வரியை அதிகரித்துள்ளமையானது எவ் வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

ஒருவேளை, மஹிந்த ராஜபக்ச பட்ட கடனை செலுத்தவே பேரீச்சம் பழத்துக்கு வரி அதிகரிப்பதாகக் கூறி முஸ்லிம்களை மேலும் முட்டாள்களாக்க வாய்ப்புள்ளது. அதனைச் செய்தாலும் செய்வார்கள்.

முஸ்லிம்களின் வாக்குளை கொள்ளையடித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி இன்று அவர்களின் வயிற்றில் அடிக்க ஆரம்பித்துள்ளது. அதனைத் தான் என்றும் இல்லாதவாறு இன்று ஹஜ்ஜுக்கு செல்பவர்களிடம் 25000 பதிவுக்கட்டணம் அறவிடப்படுகிறது. அது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இனவாதிகள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டுமெனப் பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவை எல்லாவற்றையும் இன்று மிக அழகிய முறையில் திட்டமிடப்பட்டு அரச அங்கீகாரம் பெற்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

முன்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் இப்பொழுது நாட்டில் பெரும் நெருக்கடிகள் நிகழ்கின்றன. இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள். மகிந்த காலத்தில் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தவே இவற்றைச் செய்வதாகவும் தெரிவிப்பார்கள்.

எதிர் காலத்தில் நாட்டில் முஸ்லிம் மக்களின் தொப்பிக்கும், தாடிக்கும் இவர்கள் வரிகளை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.