அ.தி.மு.க. தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இரு அணியினரும் தொண்டர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து கூட்டம் நடத்தி தொண்டர்களை சந்திக்க உள்ளார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இருவருமே தொண்டர்களை இழுக்க பலப்பரீட்சை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி நாளை மதுரையிலும், ஓ.பன்னீர்செல்வம் நாளை சென்னையிலும் போட்டி விழாக்களை நடத்தி தொண்டர்களை சந்திக்கிறார்கள்.
மதுரையில் ஆரப்பாளையம், செல்லூர் ஆகிய 2 இடங்களில் ரூ. 30 கோடி செலவில் மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலங்களை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவிற்கு முன்னதாக பக்தர்கள் வசதிக்காக திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று இந்த மேம்பாலங்கள் நாளை (5-ந் தேதி) திறக்கப்பட உள்ளது. இதனை திறந்து வைப்பதற்காகவும், மதுரை ரிங் ரோட்டில் ஜெயலலிதா பேரவை செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா ஆகியவற்றை இணைத்து 25 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மதியம் 12 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ரிங்ரோடு செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் கலந்துரையாடுகிறார்.
மாலை 4 மணிக்கு ஆரப்பாளையத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் 2 மேம்பாலங்களையும் திறந்து வைக்கும் அவர் மதுரையில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
விழா முடிந்ததும் மீண்டும் ரிங்ரோடு வரும் எடப்பாடி பழனிச்சாமி அங்கு நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்று கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.
தொடர்ந்து 25 ஆயிரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்குகிறார். அதன் பின்னர் இரவு 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளார். அவர் சென்னையில் தனது சுற்றுப்பயணத்தை நாளை தொடங்கி இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சென்று கூட்டம் நடத்தி தொண்டர்களை சந்திக்கிறார்.
இதையொட்டி நாளை (5-ந்தேதி) மாலை 4 மணிக்கு சென்னை கொட்டிவாக்கம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு மைத்ரேயன் எம்.பி., தலைமை தாங்குகிறார். இதில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று ஆலோசனை நடத்தி தொண்டர்களை சந்திக்கிறார். கழக ஆக்கப் பணிகள் குறித்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது பற்றியும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். ஜெயலலிதா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் இந்தக் கூட்டத்துக்கு தொண்டர்களை திரட்டிவருகிறார்.
தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளார்.







