ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 2-ம் வாரம் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற எம்.பி.க்கள், மாநில எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.
தற்போதைய நிலவரப்படி பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வரும் பா.ஜனதா கட்சி 13 மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது. பா.ஜ.க.வுக்கு ஆதரவாக சில மாநில கட்சிகளும் உள்ளன. எனவே ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் நிதிஷ்குமார், சரத்யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோருடன் பேச்சு நடத்தி உள்ளார்.

அடுத்தக் கட்டமாக மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருடன் பேச்சு நடத்த சோனியா திட்டமிட்டுள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
தேவை ஏற்படும் பட்சத்தில் மாநில கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தவும் சோனியா முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா நேற்று சோனியாவை சந்தித்து இது தொடர்பாக பேசினார்.
முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி, லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பிஜு ஜனதா தளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கட்சிகளையும் தங்கள் அணியில் இடம் பெற காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் மாநில கட்சி தலைவர்களுடன் பேசி வருகிறார்.
இதுவரை 10 கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
அதில் ஒருமித்த கருத்து ஏற்படாதபட்சத்தில் பிரணாப் முகர்ஜியையே மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.







