திருமண தடை நீக்கும் சீனிவாசர்

திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சன்னியாசி கிராமத்தில் இருக்கிறது கல்யாண சீனிவாச பெருமாள் கோவில். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் இது. திருப்பதி வெங்கடாஜலபதி தான் இங்கும் மூலவராக இருக்கிறார். உற்சவர் கல்யாண சீனிவாசர்; தாயார் அலமேலு மங்கை.

திருப்பதிக்கு சென்று தங்களது பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாதவர்கள், இத்தலத்திற்கு வந்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி வருகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து கல்யாண சீனிவாசப் பெருமாளை வழிபட்டால் சிறந்த வாழ்க்கை துணை அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது கல்யாண சீனிவாசருக்கு ஒரு மண்டலம் அலங்காரம் செய்து உற்சவம் நடப்பது சிறப்பாகும். மற்றும் தமிழ் புத்தாண்டு, ஆனிப்பூரம், நவராத்திரி, புரட்டாசி பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், ராப்பத்து உற்சவம் ஆகியவையும் வெகு சிறப்பாக நடைபெறும்.

இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் வெங்கடாஜலபதியை வேண்டினால் படிப்பு தடை விலகும். திருமண தடை நீங்கும். குழந்தைப்பேறு, நல்ல வேலை ஆகியவை கிட்டும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இத்தலத்து ஆஞ்ச நேயரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வழக்குகளில் வெற்றி கிட்டும் என சொல்லப்படுகிறது.

மூலவர் வெங்கடாஜலபதிக்கு திருமஞ்சனம், சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு சாற்றியும், புஷ்ப அங்கி, வஸ்திரங்கள் சாத்தியும், நைவேத்தியம் படைத்தும், ஊஞ்சல் துலாபாரம் செய்தும் முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். உத்தியோகம், உயர்பதவி கிடைக்க பெற்றவர்கள் கருட சேவை செய்தும், திருமண பாக்கியம் கிடைத்தவர்கள் கல்யாண உற்சவம் செய்தும் வழிபடுகிறார்கள். ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலைகளை சாற்றி வழிபட்டு வருகிறார்கள்.

திருநெல்வேலி ஜங்ஷன், டவுன் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து ஆட்டோக்களில் சென்று வரலாம்.