அ.தி.மு.க.வின் இரு அணிகளும் 100 சதவீதம் சேர வாய்ப்பு இல்லை: நாஞ்சில் சம்பத்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நடந்த மே தின விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அம்மா அணியின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

டீக்கடை வைத்திருந்த அவரை முதல்-அமைச்சராக ஜெயலலிதா அறிவித்தார். அவரால் இந்த நாடு படாத பாடுபடுகிறது. மேலும் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் 100 சதவீதம் சேர வாய்ப்பில்லை.

ஜெயலலிதாவுக்கு இயற்கை மரணம் தான். ஜெயலலிதாவின்மரணம் குறித்து அப்போதெல்லாம் எந்த சந்தேகமும் எழுப்பாத பன்னீர்செல்வம் தற்போது சி.பி.ஐ. விசாரணை தேவை என்று கூறி வருகிறார். இது அ.தி.மு.வுக்கு இழைக்கின்ற மிகப்பெரிய துரோகம். சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை.

ஜெயலலிதா உடல்நலம் குன்றினார். அப்பல்லோ மருத்துவமனையில் உடல் முழுவதும் குழாய்கள் பொருத்தி சிகிச்சை பெற்றார். இருதய அடைப்பு ஏற்பட்டதால் தான் அவர் உயிர் இழந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர் தற்போது சிறையில் உள்ளார். அ.தி.முக.வை வழிநடத்த சசிகலாவால்தான் முடியும். அவர் விரைவில் மீண்டு வருவார்.

பன்னீருக்கு எதற்காக ‘ஒய்’ பாதுகாப்பை மத்திய அரசு கொடுக்க வேண்டும், அவரும் ஸ்டாலினும் சேர்ந்து அ.தி.மு.க.வை திட்டமிட்டு அழிக்க நினைக்கின்றனர். தினகரன், ஆர்.கே. நகரில் ஒரு லட்சம் ஓட்டுகளில் வெற்றி பெறுவதாக உளவுத்துறை கூறியதால் தேர்தலை நிறுத்தி விட்டனர்.

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த 10 எம்.எல்.ஏ.க்களும் விரைவில் முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்க உள்ளனர். பன்னீர் செல்வம் அணி விரைவில் காணாமல் போய்விடும். கட்சி தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம். அ.தி.மு.க. பயணம் தொடரும், யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசியலில் அனுபவம் மிக்கவர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போதே அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர் பன்னீர் செல்வம். தற்போதும் அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். இன்றைய சூழ்நிலையில் செயல்படுத்த முடியாத நிபந்தனையை பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.

இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பி.எஸ். இணைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஒன்றாக இணைவதை விரும்பாமல் தான் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.