சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல் மார்ச் மாதம் 18-ந் தேதி வரை 31 நாட்களில் 28 பார்வையாளர்கள் சந்தித்து பேசியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி அம்பலப்படுத்தினார்.
இதையடுத்து சசிகலா சிறை விதிகளுக்கு முரணாக அதிக அளவில் பார்வையாளர்களை சந்தித்து வருவதாக செய்தி பரவியது. இது தொடர்பாக சிறை அதிகாரிகளை மேல் அதிகாரிகள் கண்டித்தனர்.
அதன்பிறகு சசிகலா விவகாரத்தில் சிறை விதிகள் கடுமையாக கடை பிடிக்கப்படும் என்று சிறைத் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார். தற்போது சிறைத் துறையின் கெடுபிடியால் சசிகலாவை அடிக்கடியாரும் பார்க்க முடியவில்லை.
சசிகலாவை சந்திக்க அனுமதி கோரி அவரது உறவினர்கள் வழங்கிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சிறை விதிப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை 3 பேர் மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் டி.டி.வி தினகரன், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் சசிகலாவை சந்திக்க முடியவில்லை.
கடந்த 2 மாதங்களாக சசி கலாவை சந்தித்த பார்வையாளர்கள் குறித்த தகவலை பரப்பன அக்ரஹாரா சிறைத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை சசிகலா 19 பேரை சந்தித்துள்ளார். ஏப்ரல் 15-ந் தேதியில் இருந்து நேற்று வரை 3 பேர் மட்டுமே சந்தித்து பேசியுள்ளனர்.
சசிகலாவை நெருங்கிய உறவினர் டாக்டர் சிவகுமார் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். மற்ற இரு உறவினர்கள் 45 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சசிகலாவுடன் ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசி உடல் நிலை பாதிப்பு காரணமாக பெரும்பாலான நேரம் மருத்துவ மனையிலேயே தங்கி இருக்கிறார். இதனால் சசிகலா தனிமையில் வாடி வருகிறார்.

ஜெயிலுக்கு வந்த ஆரம்பத்தில் சசிகலா தெம்பாக காணப்பட்டார். ஆனால் சமீபத்தில் அ.தி.மு.க. வில் நடந்த அரசியல் குழப்பங்கள், பிரச்சினைகள், டி.டி.வி தினகரன் கைது, உறவினர் மரணம் ஆகிய சம்பவங்கள் அவரை வெகுவாக பாதித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.







