சிறுவர்கள் அவர்களின் பெற்றோருடன் வாழுவதற்கான சூழலை ஏற்படுத்துங்கள். அதுவே சிறுவர்களுக்கான சிறந்த சூழலாகும் என வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யுத்தத்திற்கு பின்னர் பல சிறார்கள் தங்களது தாய், தங்தையர்களை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். இது மிகவும் கொடுமையானது.
நாங்கள் எவ்வாறான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தாலும் அவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் வாழுவதை போன்றதொரு சந்தோசம் இருக்காது.
சிறுவர்கள் வாழ்வதற்கான சிறந்த சூழல் அவர்களது வீடுகள்தான் எனினும் சிலபெற்றோர்கள் பிள்ளைகளை சுமைகளாக கருதி சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
இது தவறான அணுகுமுறையாகும். ஆகவே நீங்கள் இயலுமானவரை பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்களுடன் வாழுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 07 சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.
இவர்களில் வவுனியா மாவட்டத்திற்கு ஒருவரும், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 02 பேரும், மன்னார் மாவட்டத்திற்கு 04 பேரும் முதற்கட்டமாக நியமனம் பெற்றுள்ளார்கள்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், உதவிச்செயலாளர் சுஜீவா, சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் விஸ்வறூபன் உட்பட அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.







