எகிப்தின் பழங்கால கல்லறையில் 8 மம்மிகள் கண்டுபிடிப்பு!

எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் லக்சார். இந்த நகரின் அருகில் உள்ள பகுதிகளில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சுமார் 3 ஆயிரத்து 500 வருடங்கள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்றில் இருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

அவற்றுடன் மரத்தினாலான வண்ணமிகு பெட்டிகள் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய சிலைகளும் இருந்துள்ளன. இதுதவிர வெள்ளை, ஆரஞ்சு, பச்சை நிறத்திலான பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. எனவே, மேலும் பல மம்மிகள் கண்டுபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி தொல்பொருள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ‘பிரபலம் வாய்ந்த வேலி ஆப் தி கிங்ஸ் என்ற பகுதி அருகே டிரா அபுல் நகா இடுகாட்டில் இந்த கல்லறை கண்டறியப்பட்டது. இது நகர நீதிபதியாக இருந்த ஒருவருக்கு உரியது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.