ஐ.பி.எல். கிரிக்கெட்: ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் தோனிக்கு, ஷேவாக் ஆதரவு

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் புனே வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அவருக்கு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஷேவாக் கூறும் போது, ‘20 ஓவர் கிரிக்கெட்டில் 6-வது இடத்தில் இறங்கி பேட் செய்வது கடினமானது. இன்னும் கூட 5 அல்லது 6-வது வரிசையில் தோனி சிறப்பாக ஆடக்கூடியவர் தான். விரைவில் பெரிய இன்னிங்சை அவர் ஆடுவார் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்னும் நிறைய ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. அதற்குள் அவரை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. தோனி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரின் திறமையை ஐ.பி.எல். கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து மதிப்பிடக்கூடாது.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர் சதம் அடித்ததை மறந்து விட வேண்டாம்’ என்றார்.