ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை; அமைச்சர் தந்த ரூ.5 லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம்; அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி விளக்கம் என்ற தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 10.04.2017 அன்று 8-ம் பக்கத்தில் செய்தி வெளியானது.
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தரப்பில் இருந்து டாக்டர் பாலாஜியை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் விளக்கம் அளித்தார். ‘தி இந்து’ நாளிதழில் மட்டும் முதல் முறையாக பிரத்யேகமாக வெளியான டாக்டர் பாலாஜியின் விளக்கம் வருமாறு:
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, 4 முறை சென்னை வந்தார். முதல் 3 முறை அவர் தனியாக வந்தபோது, தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கினார். அக்டோபர் 23-ம் தேதி 4-வது முறையாக வந்தபோது, அவருடன் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அதனால், அவரை ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்குமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அவர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலேயே தங்கினார்.
நவம்பர் 2-ம் தேதி அதிகாலை அவர் லண்டன் புறப்பட இருந் தார். அவர் தங்கியதற்கான ஹோட்டல் கட்டணத்தை நவம்பர் 1-ம் தேதி செலுத்த வேண்டும். அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரோ, ‘நாங்கள் ரெயின் ட்ரீ ஹோட்டலில் தான் தங்கச் சொல்லியிருந்தோம். அவர் ஏன் தாஜ் கோரமண்டலில் தங்கினார். அதனால், நாங்கள் கட்டணத்தை செலுத்த முடியாது’ என்று தெரிவித்தனர்.
இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அமைச்சர் உடனடியாக தனது உதவியாளரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்து அனுப்பினார். ஹோட்டல் கட்டணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 898 செலுத்தப்பட்டது. மீதமுள்ள பணத்தை அமைச்சரின் உதவியாளர் கொண்டு சென்றுவிட்டார். ஜெயலலிதாவிடம் ரேகை பதிவு செய்ததற்காக, நான் ரூ.5 லட்சம் வாங்கியதாக தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.
இந்நிலையில் பத்திரிகை மற்றும் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டாக்டர் பி.பாலாஜி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சுகாதாரத்துறை அமைச்சர் தனது உதவியாளர் மூலம் ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், அந்த தொகையைக் கொண்டு ஹோட்டல் கட்டணத்தை செலுத்தியதாகவும் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் ஊடங்களில் நேற்றும், இன்றும் செய்திகள் வெளியாகின. ஊடகங்களில் வெளியானது ஆதாரமற்ற தவறான செய்தி. இந்த பிரச்சினை தொடர்பாக நான் எந்த பத்திரிகைக்கும், ஊடகத்துக்கும் பேட்டி அளிக்கவில்லை. அந்த செய்தியில் கூறியிருப்பதைப் போல், நான் கட்டணமாகவோ அல்லது வேற எந்த வகையிலும் பணத்தையும் பெறவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என்று டாக்டர் பி.பாலாஜி தெரிவித்துள்ளார்.







