யாழ். இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து புதிய அரசியல் கலாசாலை!

யாழ்ப்பாணத்தில் அரசியல் கலாசாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாணத்தில் அரசியல் கலாசாலை ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியில் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கலாசாலைக்கு சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகளிடம் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

அதனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ் கலாசாலையில் கற்பிக்கும் நடவடிக்கை தமிழில் மேற்கொள்ளப்படவுள்ளமையினால், இந்த கலாசாலையை தனியாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 – 35 வயதுக்குட்பட்ட சாதாரண தர பரீட்சை எழுதிய இளைஞர், யுவதிகளை கலாசாலையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தவித கட்சி பேதங்களும் கருத்திற் கொள்ளப்படாதென அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே ஷாந்த பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.