காசியில் கருடன் பறப்பதில்லை, கவுளி ஒலிப்பதில்லை ஏன்?

ஸ்ரீ இராமர் இராவணனை கொன்றதால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்கின்றது. அப்பாவம் நீங்க அவர் சிவ பூஜை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இராமேஸ்வரம் அடைந்தவுடன் சிவலிங்கத்தை கொண்டு வர அனுமனை முக்தி நகரமாம் காசிக்கு அனுப்புகின்றார். காசியை அடைந்த அனுமனுக்கு அங்குள்ள ஆயிரமாயிரம் சிவலிங்களுள் எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் குழம்பி நின்றார்.

பூஜைக்கு குறித்த நேரமும் நெருங்குவதால் காசியின் காவல் தெய்வம் கால பைரவரிடம் அனுமதி பெறாமலேயே சுயம்பு லிங்கம் உள்ள இடத்தின் மேல் கருடன் வட்டமிட்டு குறிப்பிட்டுக் காட்ட பல்லியும் நல்லுரை சொல்லி சுயம்பு லிங்கத்தை அடையாளம் காட்டுகின்றது.

அனுமன் அந்த சுயம்பு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பைரவர் அவரைக் கண்டு நிறுத்தினார். உண்மையை அனுமன் உணர்த்த, தேவர்களும் ஸ்ரீ இராமரின் சிவபூஜைக்குத்தான் அனுமன் சிவலிங்கத்தை எடுத்து செல்கின்றார் எனவே அவரை நிறுத்த வேண்டாம் என்று வேண்ட, அவரை சிவலிங்கத்துடன் செல்ல அனுமதித்த கால பைரவர் அனுமனுக்கு உதவிய பல்லிக்கும், கருடனுக்கும் சாபம் கொடுக்கின்றார்.

எனவே காசியில் பல்லி சொல்வதில்லை, கருடன் பறப்பதில்லை என்பது ஐதீகம். இவ்வாறு தாமதமானதால் சீதா தேவியார் மணலால் லிங்கம் அமைக்க இராமர் சிவபூஜை செய்ததும், பின்னர் அனுமன் வருத்தப்படக்கூடாது என்று அவர் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கே இராமேஸ்வரத்தில் முதல் பூஜை என்று வரம் கொடுத்ததும் தாங்கள் அனைவரும் அறிந்ததே.