டிடிவி தினகரனை தோற்கடிப்பதற்காக ஆர்.கே.நகரில் முகாமிட்டுள்ள முதல்வர்.. ஸ்டாலின் கூறிய திடுக் தகவல்!

முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் டி.டி.வி. தினகரனை தோற்கடிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பணியாற்றுகிறார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆர்.கே. நகர் தொகுதி முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ராயபுரம் அறிவகத்தில் நேற்று நடந்தது. தொகுதியை சேர்ந்த வியாபாரிகள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தொகுதியில் உள்ள பிரச்னைகளை எடுத்துக்கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் திமுக வெற்றி பெறுவதில் எங்களை விட மக்களாகிய நீங்கள்தான் மிகுந்த அக்கறை காட்டுகிறீர்கள். தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

தமிழகத்தில் இப்போது எல்லாவற்றுக்குமே, அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு போராடினால், பயன் இல்லை என்று டெல்லி சென்று போராடுகின்றனர். ஏனெனில் இந்த ஆட்சி மீது எல்லா தரப்பு மக்களுக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி திகழ்கிறது.

முதல்வர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார். முன்பு, ஓ.பன்னீர்செல்வம் அப்படித்தான் திகழ்ந்தார். விவசாயிகள் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு நான் உட்பட தமிழகத்தின் எல்லா கட்சி தலைவர்களும் சென்று ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், முதல்வர் அங்கே செல்லவில்லை. அவர் சென்றிருந்தால் மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்தித்திருக்கலாம்.

முதல்வருடைய பணி இடைத்தேர்தல் பணியாகத்தான் இருக்கிறது. தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவரது அணி வேட்பாளரை தோற்கடிப்பதற்காக பணியாற்றுகிறார். எனவேதான் ஆர்.கே.நகரை விட்டு அகலாமல் தினகரனை தோற்கடிக்கும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு காரணமானவரே சசிகலாதான். அவர் சார்பில் ஒரு வேட்பாளர். பெரா வழக்கில் நீதிமன்றம் சென்று கொண்டிருப்பவர். இன்னொரு அணி வேட்பாளர் மதுசூதனன். அவரால் நடக்கவும் முடியவில்லை. பேசவும் முடியவில்லை. நமது வேட்பாளர் இளைஞர். அவருக்கு வெற்றி தேடி தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்