இலங்கையில் நீதி விசாரணைப் பொறிமுறையை தற்போதைக்கு ஏற்படுத்தப்போவதில்லை : வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் நீதி விசாரணைப் பொறிமுறையை தற்போதைக்கு ஏற்படுத்தப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அரசு உள்நாட்டு பொறிமுறையை உருவாக்கும், காணாமல் போனவர்கள் குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை ஏற்படுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசங்கம் உருவாக்க எண்ணியுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஆகியவை குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமானால் யுத்தக் குற்றங்கள் குறித்த நீதி விசாரணைப் பொறிமுறைக்கான அவசியம் இல்லாமல் போகலாம் என்று வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த அலுவலகம் ஜே.வி.பியின் கிளர்ச்சிக் காலத்தில் காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் உட்பட காணாமல் போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலகத்திற்கு வழக்குத் தொடர்வதற்கான அதிகாரம் வழங்கப்படாது. இதன் பின்னர் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்தவுள்ளோம்.

அந்த ஆணைக்குழுவின் இறுதி வடிவம் குறித்து நாங்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை. தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் அனுபவங்களை நாங்கள் உள்வாங்குகின்றோம்.

ஆனால் எங்கள் பொறிமுறை தென்னாபிரிக்கா பாணியிலானதாக காணப்படாது. அடுத்த சில மாதங்கள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி வடிவம் குறித்த முடிவுக்கு நாங்கள் வரமுடியும் என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.