மூத்த துணைப் பொதுச்செயலர் பதவி கேட்கும் திவாகரன்.. அதிர்ச்சியில் சசிகலா!

அதிமுக (அம்மா) கட்சியில் தம்மை மூத்த துணைப் பொதுச்செயலராக நியமிக்க வேண்டும் என பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் அவரது சகோதரர் திவாகரன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை கைப்பற்றினார் சசிகலா. அந்த கட்சியின் பொதுச்செயலராக தம்மை ‘நியமனம்’ செய்து கொண்டார் சசிகலா.

அடுத்ததாக முதல்வர் நாற்காலியில் அமரவும் சசிகலா பேராசைப்பட்டார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பால் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது.

சசிகலா சிறைக்கு போகும்போது அக்கா மகன் தினகரனை துணைப் பொதுச்செயலராக்கினார். அதன்பிறகு அதிமுக தினகரன் வசமானது. தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரன் முதல்வர் பதவியை குறிவைத்துள்ளார்.

அத்துடன் ஆர்கே நகர் தொகுதி பிரசாரத்தில் சசிகலாவின் படத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் தினகரன் உத்தரவிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக சசிகலாவிடம் இருந்து அதிமுகவை கபளீகரம் செய்யும் முயற்சியில் தினகரன் தீவிரமாக இறங்கியுள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் அவரது சகோதரர் திவாகரன், தினகரனின் விஸ்வரூபம் குறித்து புகார் பட்டியல் வாசித்திருக்கிறார். அத்துடன் தினகரனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த கட்சியின் மூத்த துணை பொதுச்செயலர் பதவியை தமக்கு தர வேண்டும் எனவும் அடம்பிடித்திருக்கிறாராம் திவாகரன்.

ஏற்கனவே தினகரனின் ஆடுபுலி ஆட்டத்தால் அதிர்ந்து போயுள்ள சசிகலா, திவாகரனின் இந்த நெருக்கடியை சற்று எதிர்பார்க்கவில்லையாம். பதவி கேட்டு நச்சரிக்கும் திவாகரன், கட்சியை உடைத்துவிடுவாரோ என்கிற பீதியில் இருக்கிறாராம் சசிகலா.