டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று 16வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகள் பாம்புக் கறி சாப்பிட்டு தங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கூடுதலாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 16 நாட்களாக அய்யாக்கண்ணு தலைமையில் இந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் எலிக்கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று பாம்புக் கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களது போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தற்போது ஆதரவு குவிந்து வருகிறது. போராடுவதற்கும் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்று மீண்டும் ஒரு போராட்டம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற நிலையில், முக்கிய நகரங்கள் அனைத்திலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களுக்குப் பின்னர் நேற்றுதான் மத்திய அமைச்சர்களை விவசாயிகள் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இருப்பினும், தங்களது கடனை தள்ளுபடி செய்யாமல் ஜந்தர் மந்தரை விட்டு அகல மாட்டோம் என்று விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் போதிய பருவ மழை இன்றி, காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய நீரும் கிடைக்காமல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தமிழகத்திற்கு உணவு அளித்துக் கொண்டு இருக்கும் காவிரி டெல்டா பகுதி வறண்டு, நெல் விளைச்சல் போன்ற விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்தார். ரூ. 60,000 கோடிக்கும் மேல் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசோ ரூ. 2000 கோடிக்கும் குறைவாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.







