நச்சுத்தன்மையான பொருட்களை பாவித்தமையினால் யுத்தத்தினைவிடவும் அதிகப்பேர் இறந்திருக்கிறார்கள் : அத்துரலியே ரத்ன தேரர்

யூரியா மற்றும் நச்சுத்தன்மையான பொருட்களை மக்கள் பாவித்தமையினால் யுத்தத்தினை விடவும் அதிகப்பேர் இறந்திருக்கிறார்கள் என ஜனாதிபதி செயலகத்தின் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் பிரதானியான அத்துரலியே ரத்ன தேரர் மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் தார்மீக விவசாயம், ஆரோக்கியமான சமூதாயம், என்ற தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நச்சுத்தன்மையற்ற நாடு எனும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் மாவட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து பகிரும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நீர் மாசடைதல், இரசாயனம் கலத்தல் ஆகிய காரணங்கள், இரசாயனப் பாவனைகளால் புற்றுநோய், சிறுநீரக நோய்களும் அதிகளவில் ஏற்படுகின்றன.

ஆசனிக் இதில் முக்கிய இடம் பெறுகிறது. நீரைக் கொதிக்க வைக்கும் அலுமினியம் பாத்திரங்கனால் அதிகம் கலக்கிறது.

யூரியா நாம் பாவித்து அறுவடை முடிந்தாலும் நீரில் அது கலந்தே இருக்கும். நாம் மிகவும் குறைந்தகாலமே வாழப்போகிறோம். யூரியாப்பாவனையானது மிகவும் ஆபத்தானது.

வறுமை ஒழிப்பைப் போலவே இந்த இரசாயனப்பாவனையையும் இல்லாமல் செய்யவேண்டும். உங்களுடைய சகோதர மக்கள் யூரியா மற்றும் நச்சுத்தன்மையான பொருள்களை பாவித்தமையினால் யுத்தத்தினைவிடவும் அதிகப்பேர் இறந்திருக்கிறார்கள்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வருடாந்தம் 15ஆயிரம் பேர் இறக்கிறார்கள். யுத்தத்தினைவிடவும் அதிகமானவர்கள் இறக்கிறார்கள்.

இதற்கெல்லாம் அரச சேவையில் இருப்பவர்கள்தான் ஏதாவது செய்யவேண்டிய தேவை இருக்கிறது. உண்மையில் முழு உலகத்திலுமே இரண்டு மாதங்களுக்குள் 5ஆயிரம் தொன் பசளையை உருவாக்கிய ஒரேயொரு நாடு இலங்கைதான்.

திருகோணமலையில் நாங்கள் முன்னெடுத்த திரவ பசளை பாவனைத் திட்டத்தின் ஊடாக இரசாயனப்பசளையைப்பார்க்கிலும் 90 வீதமான உற்பத்தியினைப் பெற்றுள்ளோம்.

விசேடமாக யூரியா பாவிக்கின்ற இடங்களில் வரண்டு போய்விடும் நாங்கள் பாவிக்கின்ற திரவப் பசளையில் நல்ல ஈரலிப்பும் திறனும் இருக்கிறது.

எனவே இரசாயனப் பாவனையினை இல்லாமல் செய்து இயற்கையான பசளைகளை பாவிப்பதன் மூலமும் எண்ணை வகைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் நோயற்ற சமுதாயத்தினை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றார்.