தீமையின் நடுவிலும் கடவுள் ஒரு நன்மையை உருவாக்குகிறார்

“இதோ, நான் புதிய காரியத்தை செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசாயா 43:19)”

இந்தியாவிற்கு கிறிஸ்தவ சுவிசேஷத்தை சுமந்து வந்த மிஷனரிகளில் மிக முக்கிய மாணவர் வில்லியம் கேரி. அவர் இந்தியாவிற்கு வந்து இந்திய மொழிகளை கற்று இந்தியர் களுக்கு ஏசு கிறிஸ்துவை பற்றி நற்செய்தி அறிவித்தவர். தொடக்கத்தில் அவர் வங்காள மொழியை கற்று அந்த மொழியில் புதிய ஏற்பாட்டு வேதாகமத்தை சுமார் 12 ஆண்டுகால கடும் முயற்சியில் மொழி பெயர்ப்பு செய்தார். ஆனால் அச்சகத்தில் நடைபெற்ற தீ விபத்தில் அனைத்தும் எரிந்துபோனது. எவ்வளவு பெரிய வேதனையான நிகழ்வு இது. எண்ணிப்பாருங்கள்.

ஆயினும் அவர் தன்னை திடப்படுத்திக்கொண்டு, மீண்டும் மொழி பெயர்ப்பு பணியில் இறங்கினார். இரண்டாவது மொழி பெயர்ப்பு முதல் மொழிபெயர்ப்பை விட மிக சிறப்பானதாகவும், தவறுகள் தவிர்க்கப்பட்டதாகவும் இருந்தது. ஒரு விபத்து ஒரு பெரிய முயற்சியின் பலனை அழித்துப்போட்டது போல தோன்றினாலும் உண்மையில் சிறப்பான ஒன்று உருவாவதற்கே அது வழிவகுத்தது.

ஆம். கடவுள் சில நஷ்டங்கள் வாயிலாகவும், சில லாபங்களை உருவாக்குகிறார். சில நேரங்களில் நமக்கு நிகழ்கின்ற சில காரியங்கள் எந்த விதத்திலும் நன்மையானது என்று பார்க்க முடியாத அளவிற்கு தீமையானவையே ஆனால், நாம் கடவுளோடு இருந்தால் அந்த தீமையின் நடுவிலும் கடவுள் ஒரு நன்மையை உருவாக்குகிறார்.

நம்முடைய வாழ்க்கையின் எந்தவொரு தோல்வியின் நடுவிலும், நஷ்டத்தின் நடுவிலும், ஏமாற்றத்தின் நடுவிலும் கடவுளை உறுதியாக பற்றிக்கொண்டு வாழ பழகிக்கொள்ளவேண்டும். அப்பொழுது அந்த தோல்விகளையும் நஷ்டங்களையும், ஏமாற்றங்களையும் கடவுள் உபயோகித்து ஒரு ஆசீர்வாதமான ஒன்றை ஏற்படுத்த வல்லவராயிருக்கின்றார்.

நகோமிக்கு நிகழ்ந்தவைகள் யாவும் வேதனையானவைகளே. அவற்றை நன்மைகள் என கூற முடியாது. ஆனால் அந்த தீமையான சூழல்களை கடவுள் பக்குவமாக உபயோகித்து ஒரு நன்மையான சூழலை உருவாக்கினார் என்பது எத்தனை ஆறுதலான விஷயம்.

சில குடும்பங்களில் ஏற்பட்ட வியாபார தோல்வி, மரணங்கள், உறவு பிரிந்த நிலைகள் வேலை இழப்புகள், திருமண தடைகள், சிலரால் இழைக்கப்பட்ட மிக மோசமான அநீதிகள் போன்றவை அந்தந்த குடும்பங்களை கடுமையான வேதனைக்குள் தள்ளியிருக்கின்றன. ஆனால் அவைகளின் நடுவில் கடவுளை உறுதியாக பிடித்துக்கொண்டதால் கடவுள் கேடானவைகளின் நடுவிலும் செயல்பட்டு முந்தியிருந்ததைவிட மிக மேன்மையான சூழ்நிலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

“ தொடக்கத்தில் நீ பெற்ற சில தோல்விகள், எதிர்கால வெற்றிகளை தக்கவைக்கும் முள்வேலிகள்.”