ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் 108 வாக்குறுதிகள்… கலக்கும் மதுசூதனன்!

ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் 108 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுவோம் என்றும், அதன் மூலம் வெற்றி நிச்சயம் என்றும் ஆவடி தொகுதி எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 14 தினங்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக புரட்சித் தலைவி அம்மா வேட்பாளர் மதுசூதனன் இன்று காலை ஆர்.கே.நகரில் பிரரம் மேற்கொண்டார்.

அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள மாஃபா பாண்டியராஜன் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் மாஃபா கூறுகையில், ஆர்.கே. நகரில் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் நாளை பரப்புரை மேற்கொள்கிறார். தண்டையார்பேட்டையில் தேர்தல் பணிமனையும் நாளை திறக்கப்படும்.

மேலும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்பதுதான் எங்களது முதல் வாக்குறுதி. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது.

இந்த தொகுதியில் ஜெயலலிதா நிறைவேற்றுவதாக உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம். அவரது கனவை நனவாக்கும் வகையிலான திட்டங்கள் அடங்கிய 108 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும். இந்த தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவது என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.