வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் தீவிர கண்காணிப்பில் உள்ள முக்கியமான விமான நிலையம் ஆகும். ஏற்கனவே, கடந்த வாரம் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்த ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி, பாதுகாப்பு கெடுபிடி அதிகமாக இருந்ததை தொடர்ந்து விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி அருகே தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், தீவிரவாதி உடல் சிதறி இறந்தான்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் தரப்பிலோ போலீஸ் தரப்பிலோ இழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியான நிலையில் தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி கிட்டத்தட்ட 30 வயதுடையவராக இருக்கலாம் என்றும் ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய வளாகத்தின் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீசார், துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அருகாமையில் வேறு ஒரு தீவிரவாதி பதுங்கியிருக்கலாம் என்பதால் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.