ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவில் நடக்கும் வன்முறையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான சிரியா தூதர் ஸ்டாஃபென் டீ மிசுத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெனீவாவில் பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகளின் மூலம் சிரிய வன்முறைகளை குறைக்கும் பணிகளில் டீ மிசுத்ரா ஈடுபட்டு வருகிறார். ஐ.நா. கோரிக்கையை ஏற்று இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்ப்பதாக மிசுத்ரா தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு வரும் சிரியர்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விடுவதும் தொடர்கதையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.







