டெஸ்ட் தரவரிசை புள்ளிகள்: பிராட்மேன் சாதனையை முறியடிப்பாரா ஸ்மித்?

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து வருபவர் ஸ்டீவ் ஸ்மித். தற்போது இந்தியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியி்ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புனேவில் நடைபெற்று முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தார்.

அதன்பின் ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசினார். இதன்மூலம் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்மித், தற்போது 941 புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் ‘கிரிக்கெட் கடவுள்’ என்று புகழப்படும் டான் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்று அதிகப் புள்ளிகள் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது சாதனையை இதுவரை யாரும் நெருங்கியது கிடையாது. இங்கிலாந்தின் ஹட்டன் 945 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ஹோப்ஸ் 942 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பாண்டிங் 942 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். ஸ்மித் 941 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

25-ந்தேதி தரம்சாலாவில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதில் ஸ்மித் சதம் அடித்தால் பிராட்மேன் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. கவாஸ்கர் 916 புள்ளிகள் பெற்று 23-வது இடத்தில் உள்ளார்.