உண்மையான துரோகி யார் என்பது நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தெரிய வரும் என்று அதிமுக நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பங்கேற்று பேசினார்.
அப்போது பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் அதிக ஓட்டுகளை பெறுவார்கள் என்றும் நிர்மலா பேசியுள்ளார். இதனால் அவருக்கும், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார் நிர்மலா பெரியசாமி. அதன் பின்னர் கூடிய விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இணைய உள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். மேலும் சில பேச்சாளர்கள் தன்னுடன் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இணைவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த நிர்மலா பெரியசாமி தன்னை ஓபிஎஸ் அணியில் இணைத்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கு சந்தேகம் உள்ளது. அதை தெளிவுபடுத்த வேண்டும். உண்மையான துரோகி யார் என்பது ஆர்.கே.நகர் தேர்தலில் தெரியவரும் எனக் கூறினார்.
மேலும், இனிமேல் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் மக்களை சந்திக்க முடியும்.விசுவாசத்திற்கு உண்மையாக இருப்பவர்களின் பக்கம் இணைந்துள்ளேன். நேற்றைய கூட்டத்தில் குண்டுகல்யாணம், வளர்மதி ஆகியோர் என்னை கட்சியில் இருந்து வெளியே செல்லுங்கள் என்று ஒருமையில் கூறினார்கள். இவ்வாறு நிர்மலா பெரியசாமி கூறினார்.







