உலக கின்னஸ் சாதனைக்கு ராகுல் பெயர் பரிந்துரை!

தொடர்ந்து தேர்தல்களில் தோல்வி அடைந்ததற்காக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பெயர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று மத்தியப்பிரதேச மாணவர் ஒருவர், உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்குப் பரிந்துரைத்துள்ளார்.

இந்திய அளவில் தற்போது, அதிகம் கலாய்க்கப்படும் தலைவராக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாறிவருகிறார். குறிப்பாக, அண்மைக் காலமாக காங்கிரஸ் தோல்விக்கு, ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்துவதுதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத் தேர்தலில், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, மாநிலத்திலுள்ள மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கைகுறித்துச் சொல்ல ராகுல் காந்தி தடுமாறினார். இந்தச் சம்பவத்துக்கும் அவர் சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டார்.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் படிக்கும் விஷால் திவான் என்ற மாணவர், 27 தேர்தல்களில் தோல்வியடைந்ததற்காக, ராகுல் காந்தியின் பெயரை உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

இதற்கான பதிவுக் கட்டணத்தையும் அவர் கட்டியுள்ளார். அந்த மாணவரின் பரிந்துரையை, கின்னஸ் சாதனைப் புத்தகம் பெற்றுக்கொண்டதை, அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் ஆளும் பாஜகவின் தூண்டுதலால் நடைபெறுவதாகவும், இணையத்தில் எதிர்கட்சிகளையும் தங்கள் கொள்கைகளுக்கு எதிராக கருத்து பதிவு செய்பவர்களையும் தராதரமின்றி வசைபாட ஒரு கூட்டத்தையை மாத ஊதியம் தந்து பாஜக உருவாக்கி வைத்திருக்கிறது என அண்மையில் பத்திரிகையாளர் ஒருவர் எழுதி வெளியிட்ட புத்தகம் ஒன்றில் ஆதாரத்துடன் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.