மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத் தொகையை வசூலிக்க முடியுமா என்பது குறித்து விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் சமீபத்தில் உறுதி செய்தது. இருப்பினும் ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கைவிடப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசுக்கு குழப்பம் ஏற்பட்டது. சட்ட வல்லுனர்களும் இதுதொடர்பாக இரு வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து தற்போது கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட்டு அபராதத் தொகையை வசூலிக்க முடியுமா? ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை கைவிடப்பட்டதாக கருத முடியுமா? என்ற விளக்கங்களை கர்நாடக அரசு கோரியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை கூர்ந்து ஆய்வு செய்தால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க முடியாது என்று கூறப்படுகிறது. காரணம், ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை வைத்து ஒரு தரப்பு, அபராதத்தை வசூலிக்க முடியாது என்று கூறி வருகிறது.
ஆனால் சட்டப்படி, ஒரு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவர் உயிருடன் இருந்தால், அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க முடியாது. எனவேதான் தற்போது கர்நாடக அரசுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே அது விளக்கம் கேட்டு மனு செய்துள்ளது.