தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக வன்முறை அற்ற வகையில் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை வழங்க வேண்டிய சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கின்றது. அரசாங்கம் தாங்களாக முன்வந்து எமக்கான உரிமைகளை தரப்போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கேப்பாப்பிலவு பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி கேப்பாப்பிலவு மக்கள் கடந்த 19 நாட்களாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி போராட்ட களத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அங்கு மக்களை சந்தித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாங்கள் கேப்பாப்பிலவு மக்களுடைய நிலங்களில் மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிபுணர் குழு ஒன்றை நியமித்தோம். அந்த நிபுணர்குழு படைமுகாமை தென்மேற்கு பக்கமாக பின் நகர்த்தும் படியாக கூறப்பட்டுள்ளது.
அந்த விடயங்களை நாங்கள் அரசாங்கத்திற்கும் கூறியிருந்தோம். ஆனால் அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.
இந்நிலையில் மக்களுடைய போராட்டங்களை நிறுத்தும் படியாக நான் கேட்கப்போவதில்லை.
காரணம் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் காலம் இதுவாகும். எனவே மக்கள் வன்முறை இல்லாமல் அரசாங்கத்திற்கு நெருக்குவாரங்களை கொடுக்க வேண்டும்.
அதுவரையில் நாங்கள் உங்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றார்.