டோனியின் 70 ரன் வீண்: பெங்காலிடம் தோல்வியடைந்து இறுதி வாய்ப்பை இழந்தது ஜார்க்கண்ட்

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே அரையிறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி பெங்கால் அணியுடன் மோதியது.

டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணியின் கோஸ்வாமி, ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 34.2 ஓவரில் 198 ரன்கள் குவித்தது. கோஸ்வாமி 99 பந்தில் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

மற்றொரு வீரரான ஈஸ்வரன் 121 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 3-வது நபராக களம் இறங்கிய கேப்டன் மனோஜ் திவாரி 49 பந்தில் 75 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, பெங்கால் அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்தது.

பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் விராட் சிங் (24), பிரத்யூஷ் சிங் (11), டியோபிராட் (37), சவுரப் திவாரி (48) குறிப்பிட்ட இடைவெளியில் அவுட் ஆக, கேப்டன் டோனி 62 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 70 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

டோனி அவுட்டாகும்போது ஜார்க்கண்ட் அணி 43 ஓவரில் 250 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற 42 பந்தில் 80 ரன்கள் தேவைபட்டது. டோனிக்கு அடுத்து களம இறங்கிய ஜக்கி 43 பந்தில் 59 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன்பின் வந்த வீரர்களால் அடித்து விளையாட முடியவில்லை. இதனால் ஜார்க்கண்ட் அணி சரியாக 50 ஓவர்கள் முடிவில் 288 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனால் பெங்கால் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பெங்கால் அணி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

அரையிறுதியில் பெங்கால் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஓஜா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.