தீபாவை முதல்வராக்குவதே என் கடமை: மாதவன் திடீர் அந்தர் பல்டி!

தீபா பேரவையில் தீயசக்திகள் ஊடுருவியுள்ளதால் தான் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக கூறிய தீபாவின் கணவர் மாதவன், தற்போது தீபாவை முதல்வராக்குவதே எனது கடமை என்று பல்டி அடித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்தநாளான 24ஆம் தேதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்தார் தீபா. தன்னுடன் இருந்த கார் டிரைவர், தோழி ஆகியோருக்கு பேரவையில் முக்கிய பொறுப்பு அளித்தார். இதன் பின்னரே தீபாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சினை ஆரம்பித்தது.

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்த மாதவன் தியானம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீபா பேரவையில் தீய சக்திகள் ஊடுருவியுள்ளன. எனவே அதில் அவரால் தனித்து செயல்பட முடியவில்லை.

பேரவைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் தீபாவும், மாதவனும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதக பேசப்பட்டது.

இருவரின் கருத்து வேறுபாடுகளுக்கு கோடிக்கணக்கிலான பேரமே காரணமாகும் என்று கூறப்பட்டது. மாதவன் செயல்பாடுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய தீபா, கணவர் மாதவனை தம்மிடம் இருந்து பிரிக்க சசிகலா கோஷ்டி சதி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தீபாவை முதல்வராக்குவதே தமது கடமை என்று தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவொற்றியூரில் அவர் பேசுகையில், தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபாவை முதல்வராக்குவதே எனது கடமை என்று ஒரே போடாக போட்டார்.

கட்சி ஆரம்பித்த நாள் முதல் மனைவிக்கு பக்கபலமாக இருந்த மாதவனின் மாறுபட்ட கருத்துகளால் தொண்டர்களும், தமிழக மக்களும் குழம்பியுள்ளனர்.