அமெரிக்காவில் நடந்து வரும் இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிசில் ரபெல் நடால் நேர் செட்டில் பெடரரிடம் தோல்வி அடைந்தார்.
பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர்கள் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடாலும் (ஸ்பெயின்) மல்லுகட்டினர். தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய பெடரர் 4 முறை எதிராளியின் சர்வீசை முறியடித்து 6-2, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
நடாலுக்கு எதிராக கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களில் பெடரரே வெற்றி கண்டுள்ளார். நடாலை தொடர்ந்து 3 முறை பெடரர் சாய்த்து இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனாலும் மொத்தத்தில் பெடரருக்கு எதிராக 36 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் நடால் அதில் 23-ல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் 5 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியாஸ் 6-4, 7-6 (3) என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். மணிக்கு அதிகபட்சமாக 141 மைல் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டியதுடன், 14 ஏஸ் சர்வீஸ்கள் விளாசியது கைர்ஜியாசின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.
இதன் மூலம் இண்டியன்வெல்ஸ் டென்னிசில் தொடர்ச்சியாக 19 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஜோகோவிச் வீறுநடை முடிவுக்கு வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மெக்சிகோ ஓபனிலும் இதே கைர்ஜியாசிடம் ஜோகோவிச் மண்ணை கவ்வியிருந்தது நினைவு கூரத்தக்கது. கால்இறுதியில் பெடரர், 21 வயதான கைர்ஜியாசை எதிர்கொள்கிறார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), ஜாக் சோக் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் கால்இறுதிக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 7-6 (2), 7-6 (5) என்ற நேர் செட்டில் கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) வெளியேற்றி அரைஇறுதி சுற்றை எட்டினார்.
இதே போல் ரஷியாவின் ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் பாவ்லிசென்கோவாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.