ஜார்கண்ட்: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி தங்கியிருந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள துவாரகா பகுதியில் இன்று மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் ‘ஹசாரே சுழற்கோப்பை’ அரையிறுதி கிரிக்கெட் போட்டி நடைபெறவிருந்தது.

இந்த போட்டியில் விளையாடுவதற்காக நேற்று ஜார்கண்ட் மாநிலத்துக்கு வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் துவாரகா பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று காலை சுமார் 9 மணியளவில் இந்த ஓட்டலின் ஒருபகுதியில் பற்றிய தீ, மளமளவென அங்கிருந்த அறைகளுக்கு பரவியது. இதனால், அங்கு தங்கியிந்த அனைவரும் பீதியடைந்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துவந்த மீட்புப் படையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அங்கு கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதற்கான பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் துவாரகாவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தை தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான ‘ஹசாரே சுழற்கோப்பை’ அரையிறுதி கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.