சுவையான சத்தான முளைகட்டிய பருப்பு புலாவ்

தேவையான பொருட்கள் :

பச்சைப் பயறு – 50 கிராம்
சுண்டல் – 50 கிராம்
காராமணி – 50 கிராம்
ராஜ்மா – 30 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பெங்களூர் தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
வரமிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
பாசுமதி அரிசி – 2 கப்
உப்பு – தேவையான அளவு
கிராம்பு – 5
பட்டை – 1 இன்ச் அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
தண்ணீர் – 5 கப்

குறிப்பு:

2 கப் அரிசிக்கு, 4 கப் தண்ணீர் போதுமானது. ஆனால் தானியம் – பயறு வேக வைப்பதற்காக 1 கப் கூட சேர்க்கிறோம். இல்லையெனில் பயறைத் தனியாக வேக வைத்தும் செய்யலாம்.

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

* பருப்பு வகைகளை நன்றாக கழுவி சுமார் 8 மணி நேரம் நன்கு ஊற வைத்த பின் தண்ணீர் வடித்து பாத்திரத்தில் அப்படியே மூடி வைத்தால், 3 முதல் 5 மணி நேரத்தில் பருப்பு முளைத்து விடும்.

* குக்கரில் எண்ணெய் சேர்த்து, கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து அதனுடன் முளைகட்டிய பயறைச் சேர்க்கவும்.

* அடுத்து தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் வரமிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும்.

* அடுத்து அதில் கழுவி ஊற வைத்து சுத்தம் செய்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி 3 விசில் போட்டு வேக விட்டு இறக்கவும்.

* சுவையான முளைகட்டிய பருப்பு புலாவ் தயார்