தீபா பேரவையில் தொடரும் வெட்டு குத்து: நிர்வாகிக்கு மாஜி எம்.பி அர்ச்சுணன் பளார் விட்டதால் பரபரப்பு!

எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை தொடங்கியது முதலே அந்த அமைப்பில் வெட்டு குத்து தொடர் கதையாகி வருகிறது. தற்போது சேலத்தில் தீபா பேரவை நிர்வாகி ஒருவரை முன்னாள் எம்.பி. அர்ச்சுணன் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை கடந்த மாதம் 25-ந் தேதி தீபா தொடங்கினார். பேரவையை தொடங்கி ஒரு மாதத்திற்குள் நிர்வாகிகள் நியமிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது.

ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தீபாவுக்கும் அவருடைய கணவர் மாதவனுக்கும் இடையேயான சண்டையில் பேரவை நிர்வாகிகள் நியமிப்பதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேர்வை சார்பாக மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சேலம் நேஷனல் ஓட்டலில் நடைபெற்றுது.

முன்னாள் எம்பி அர்ச்சுனன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அதன்பின் நகரம், ஒன்றியம், பேரூராட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.

அப்போது தாரமங்கலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஏன் எங்களுக்கு இது குறித்து முன்பே சொல்லவில்லை என்று அர்ச்சுனனிடம் மல்லுக்கட்டினார். இதனால் கோபமடைந்த அர்ச்சுனன் ராஜ்குமாரின் கன்னத்தில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனது இடது கன்னம் வீங்கி விட்டதாக ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.