ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமே தங்களது அணியின் ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டன் வீனஸ் காலனியில் குடியேறியுள்ள ஓ. பன்னீர்செல்வம் அங்கு தமது ஆதரவாளர்களிடம் பேசியதாவது:
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தீபா போட்டியிட்டாலும் அவரை பற்றி எந்த ஒரு விமர்சனமும் செய்ய வேண்டாம். நமக்கு முதல் பணியே சசிகலா அணியை தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான். அதன்பின்னர் திமுகவை வீழ்த்த வேண்டும்.
இந்த தேர்தலில் இரட்டை இலை கிடைக்குமா? இல்லையா? என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டாலே கட்சியும் இரட்டை இலை சின்னமும் நமக்குதான் சொந்தமாகிவிடும்.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். சசிகலா அணியினர் 32 அமைச்சர்களையும் ஆர்.கே.நகரில் இறக்கி அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவர். அதை முறியடித்தாக வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.







