ஜெ.வை. தாமதமாக அப்பல்லோ கூட்டிச் சென்றது ஏன்?: டாக்டர் அழகு தமிழ்ச் செல்வி

போயஸ்கார்டனில் உடல் நலமில்லாமல் போன ஜெயலலிதாவை அப்பல்லோவிற்கு தாமதமாக கொண்டு வந்தது ஏன் என்றும்? அவருக்கென்று கொடுக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் எங்கே போனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த டாக்டர் அழகு தமிழ் செல்வி.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கேட்டு வருகின்றனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், மரணத்தில் உள்ள மர்மங்களை, சந்தேகங்களை ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் பட்டியலிட்டுள்ளார் டாக்டர் அழகு தமிழ் செல்வி.

போயஸ்கார்டனில் செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன என்பது தொடங்கி அவரது உடலை அவசரம் அவசரமாக புதைத்தது ஏன் என்பது வரை பல கேள்விகளை சசிகலா அணியினருக்கு எழுப்பியுள்ளார். சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?
ஜெயலலிதா உடல்நலமில்லாமல் போன செப்டம்பர் 22ல் போயஸ் தோட்டத்தில் நடந்தது என்ன?ஜெயலலிதாவின் அருகில் இருந்த பணியாளர் எங்கே போனார்? ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்டிருந்த இருந்த ஆம்புலன்ஸ் வேன் எங்கே?அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கறுப்பு பூனை பாதுகாப்பு எங்கேபோனது? உடல்நலமின்றி ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது போயஸ்கார்டன் வீட்டில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்குமே அது என்னவானது?.

அரைமணிநேர தாமதம் ஏன்?
ஜெயலலிதாவிற்கு என்று ஒரு பிரத்யேக ஆம்புலன்ஸ் உள்ளது. அந்த ஆம்புலன்ஸ் எங்கே சென்றாலும் ஜெயலலிதாவின் உடனேயே செல்லும் செப்டம்பர் 22ஆம் தேதி அந்த ஆம்புலன்ஸ் எங்கே போனது. அப்பல்லோவில் இருந்து ஆம்புலன்ஸ் வந்த பின்னர்தான் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதாலேயே அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி சுயநினைவற்று போயிருக்கிறார்.

உயிரின் மதிப்பு தெரியாதா?
சாதாரண மனிதர்களின் உயிரைக்காக்கவே கோல்டன் நேரம் எனப்படும் அந்த உயிர்க்காக்கும் நேரத்திற்கும் மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால் மிகப்பெரிய அரசியல் கட்சித்தலைவி, தமிழக முதல்வராக இருக்கும் ஒருவரின் உயிரைக்காக்க போயஸ் தோட்ட வீட்டில் இருந்த ஒருவருக்குக் கூடவா அக்கறை இல்லாமல் போனது என்று கேட்டுள்ளார் டாக்டர் அழகு தமிழ் செல்வி. போயஸ் தோட்ட வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வேண்டும் என்றே தாமதமாக கொண்டு வந்தது போல தெரிகிறது.

அப்பல்லோ சிசிடிவி கேமராக்கள்
அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்த உடனே சிசிடிவி காட்சிகளில் எதுவுமே பதிவாகவில்லையா? அங்கே தரை தளத்திலும் முதல்தளத்திலும் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானவை எங்கே? ஒரே நேரத்தில் அனைத்து சிசிடிவி காட்சிகளும் என்னவானது? 75 நாட்களும் சிகிச்சை அளிப்பதாக கூறும் நீங்கள் அதற்கான ஆதாரமாக வைத்திருப்பவை எவை.

அவசர இறுதிச்சடங்கு
மரணத்திற்குப்பிறகு அவசரம் அவசரமாக அஞ்சலி செலுத்த வைத்து விட்டு உடனடியாக அடக்கம் செய்தது ஏன்? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்க வேண்டும்மெனில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தியே நாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருக்கிறோம்.

அப்பல்லோவில் நடந்தது என்ன?
அப்பல்லோவில் சில காலம் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் அடிக்கடி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன். ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் 75 நாட்களும் என்ன நடந்தது என்பதே வெளியில் இருக்கும் யாருக்குமே தெரியாது. அங்கே என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள ஒரு சாதாரண தொண்டராக நானும் ஆசைப்படுகிறேன்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு சிகிச்சை அளித்த நர்ஸ்கள், டாக்டர்களில் பலரை பணியை விட்டு நீக்கி விட்டனர். அது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.

ஏமாற்றும் அறிக்கைகள்
அப்பல்லோ மருத்துவமனை தந்துள்ள அறிக்கை, எய்ம்ஸ் மருத்துவர்கள் தந்துள்ள அறிக்கை, அரசு கொடுத்துள்ள அறிக்கை மூன்றையுமே படித்து பார்த்தாலே போதும். அதில் எத்தனை ஏமாற்று வேலைகள் செய்யப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ஒரு மருத்துவர் என்ற முறையில் இந்த அறிக்கைகள் எல்லாம் மக்கள் காதில் பூ சுற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

அதிமுகவில் பொறுப்பு
ஜெயலலிதா எனக்கு கல்வி கொடுத்த தாய். என் தந்தையின் (ஐசரி வேலன்) மரணத்திற்குப் பிறகு என்னை மருத்துவம் படிக்க வைத்தார். நான் அரசியலுக்கு வந்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. இதுவரை எந்த பொறுப்பிலும் இல்லை. விரைவில் தருவதாக கூறியிருந்தார். நான் பொறுப்புகளில் இல்லாவிட்டாலும் அவர் கொடுத்த எம்பிபிஎஸ் என்ற பட்டமே எனக்கு போதும் என்கிறார் டாக்டர் அழகு தமிழ் செல்வி.

என் உயிர் போகும் வரை ஓபிஎஸ்தான்
டிடிவி தினகரன் இப்போது பலரையும் அழைக்கிறார். அவர் யார் எங்களை அழைக்க? அதிமுகவை விட்டு போகச்சொல்லி நாங்கள் விரட்டுகிறோம். என் உயிர் போகும் வரைக்கும் ஜெயலலிதாவின் புகழை மட்டுமே பேசுவேன். ஜெயலலிதாவினால் மூன்று முறை முதல்வராக கை காட்டப்பட்ட ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அணியில் மட்டுமே நாங்கள் இருப்போம்.

இவ்வாறு டாக்டர் அழகு தமிழ் செல்வி கூறினார்.