மகளிர் தினம் தொடர்பான தனது டுவிட்டர் வாழ்த்து செய்தியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தொடர்பாக அவதூறான வகையில் கருத்து தெரிவித்தமைக்கு பிரபல டைரக்டர் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. போராட்டங்களும் நடந்து வருகிறது. நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும், பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களும் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த நிலையில் டைரக்டர் ராம்கோபால் வர்மா ஆபாச நடிகை சன்னிலியோனுடன் பெண்களை ஒப்பிட்டு தெரிவித்துள்ள கருத்து புயலை கிளப்பி இருக்கிறது. இவர் இந்தி, தெலுங்கு பட உலகில் முன்னணி டைரக்டராக இருக்கிறார். சூர்யாவை வைத்து தெலுங்கில் இயக்கிய ‘ரத்தசரித்திரம்’ படமும், சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து கன்னடத்தில் இயக்கிய ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படமும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், “நடிகை சன்னிலியோன் ஆண்களுக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தாரோ? அதுபோல் உலகில் உள்ள எல்லா பெண்களும் ஆண்களை சந்தோஷப்படுத்த வேண்டுமென விரும்புகிறேன்” என்ற சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. ராம்கோபால் வர்மாவை கண்டித்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கோவாவில் விசாகா மாம்ப் ரே என்ற சமூக சேவை அமைப்பு ராம்கோபால் வர்மா மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி போலீசில் புகார் அளித்து இருக்கிறது. மும்பையிலும் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் ராம்கோபால் வர்மாவுக்கு கண்டனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அளித்துள்ள பதிலில் “உங்கள்(ராம்கோபால் வர்மா) அம்மா, சகோதரிகள், மகள் கூடவா.? இது உங்களுக்கு அதிர்ஷ்டம். அவர்களுக்கு துரதிர்ஷ்டம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில், தனது முந்தைய கருத்துக்காக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.

‘மகளிர் தினம் தொடர்பான எனது உணர்வுகளை நான் பதிவு செய்திருந்தேன், எவ்வித நோக்கமுமின்றி, உணர்வுபூர்மற்ற வகையில் நான் தெரிவித்திருந்த கருத்தால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
எனது கருத்தால் உள்ளபடியே காயப்பட்டவர்களுக்கு மட்டும் எனது மன்னிப்பு பொருந்தும், சட்டத்தை தங்கள் கையில் எடுத்து, விளம்பரத்துக்காக என்னை மிரட்டுபவர்களுக்கு பொருந்தாது.







