காணி விடுவிப்பில் உள்ள சிக்கலை புரிந்துகொள்ள வேண்டும்!

காணி விடுவிப்பில் காணப்படும் நடைமுறை சிக்கலை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

படையினர் தங்கியுள்ள காணிகளுக்கான மாற்றுக் காணி இணங்காணப்பட்டு, அதில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே காணிகளை விடுவிக்கலாம் என்றும் அது அவ்வளவு இலகுவான விடயமல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்-

“வடக்கு, கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைக்கு உரிய வகையில் தீர்வு வழங்கப்படும். அம்மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை நாம் புரிந்துகொண்டுள்ளோம். இவ்விடயங்கள் மெதுவாக நடைபெற்றாலும் நாம் தீர்வை பெற்றுக்கொடுப்போம்.

ஆனால், தேசிய பாதுகாப்பு விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லை. தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே மக்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.