கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளேன்: சுசித்ரா

நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

“எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை செய்தவர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் எனது கணவர் உள்ளிட்ட மேலும் பலருடையை டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது பேஸ்புக்கை ஹேக் செய்தனர். இப்போது டுவிட்டரை முடக்கி இருக்கிறார்கள். டுவிட்டர் நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து எனது பக்கத்தை மூடும்படி கடிதம் அனுப்பினேன். 2 நாட்களுக்கு முன்பு ஸ்டூடியோவுக்கு சென்று பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு இரவில் வந்து வீட்டில் தூங்கினேன். காலை 9 மணிக்கு தனுஷ் அலுவலகத்தில் இருந்து போன் செய்து உங்கள் டுவிட்டர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

அப்போதுதான் படங்களை கவனித்தேன். அவற்றை அதில் இருந்து நீக்க முயற்சித்தேன். ஆனால் தொடர்ந்து அவை பதிவிடப்பட்டபடி இருந்தன. இதனால் எனது சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டுவிட்டரில் என்னை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்வதால் சிலர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்ட எனது டுவிட்டரை பயன்படுத்தி உள்ளனர்.

யாருக்கு யார் மீது பொறாமை இருக்கிறது. யாரை பழிவாங்குவதற்காக இவற்றை வெளியிடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நானும் எனது கணவர் கார்த்திக்குமாரும் கடந்த 10 வருடங்களாக குடும்ப வாழ்க்கை நடத்தினோம். ஆனால் இப்போது அந்த வாழ்க்கை நன்றாக இல்லை. திருமண வாழ்க்கை விவாகரத்து நோக்கி செல்கிறது. எனது சொந்த வாழ்க்கையையும் இப்போது தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். ஒருவரை வெறுத்தால் கூட மனிதாபிமானமில்லாமல் நடக்கக்கூடாது.

நான் இப்போது சென்னையில்தான் இருக்கிறேன். திரிஷா நடிக்கும் படத்தில் பாடுகிறேன். அந்த பாடலை ஒலிப்பதிவு செய்து விட்டுத்தான் வந்தேன். ஆனால் நான் மருத்துவமனையில் இருப்பதாக பேசுகிறார்கள். பாடல் பதிவில் இருந்தேனா அல்லது மருத்துவமனையில் இருந்தேனா என்பதை இசையமைப்பாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது உண்மைதானா என்று கேட்கிறார்கள். அது எனது சொந்த வாழ்க்கை விவாகரத்துடன் சம்பந்தப்பட்டது. எனவே அதுபற்றி விளக்கமாக பேச விரும்பவில்லை. ஆனாலும் என்னை சில நாட்களுக்கு முன்பு நிர்ப்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அது என்னுடையை விவாகரத்துடன் தொடர்பு உள்ள விஷயம்.

எனக்கு எதிரிகள் இல்லை. நண்பர்கள் தான் அதிகம் உண்டு. டுவிட்டர் சர்ச்சையில் எனது கணவர் எனக்கு எதிராக செயல்படவில்லை. அவர் தங்கமான மனிதர். பூமியில் ராமரைப்போல் அவரை பார்க்கிறேன். ஆனாலும் நாங்கள் தீர்வுகாண முடியாத ஒரு பிரச்சினை காரணமாக விவாகரத்து செய்யப்போகிறோம்.

இவ்வாறு சுசித்ரா கூறினார்.